இந்தியாவில் தத்துவமிக்க ஒரே கட்சி திமுக தான் என்று ஆ.ராசா எம்.பி கூறியுள்ளார்.
மின்னம்பலம் நடத்திய 2026 தேர்தல், ’தலைவர்களுடன் மாணவர்கள் நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முதலில் மாணவர்களை பார்த்து யாரிடம் என்ன ஆயுதம் இருக்கிறது என்று தெரியவில்லை… ஆயுதம் என்றால் கத்தியல்ல அறிவாயுதம், அதனால் பயமாக இருக்கிறது என்று கூறி மாணவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்திய ஆ.ராசா எம்.பி, தன் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாகவும் குறிப்பிட்டு பேசினார். அது வெறும் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம் என்றும், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் உண்மை உலகிற்குத் தெரிந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர், “கூட்டத்தில் இருந்தவர்களிடம், உங்களில் எத்தனை பேருடைய தந்தை அல்லது தாத்தா பட்டதாரிகள்?” எனக் கேள்வி எழுப்பினார். மிகக் குறைவானவர்களே கை தூக்கியதைக் கண்டு, இவ்வளவு பெரிய சமூகத்தில் கல்வி சென்றடையாத காலத்தில்தான் திராவிட இயக்கம் தேவைப்பட்டது” என்று கூறினார்.
தூய தமிழைப் பேசிய அறிஞர்கள் கூட சாதியை விட மனமில்லாமல் இருந்தபோது, பெரியாரும் அண்ணாவும், கலைஞரும் தான் தமிழ் வந்தால்தான் சமத்துவம் வரும் என்று சொல்லிக்கொடுத்தார்கள் என்று கூறிய ஆ.ராசா, காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம், கலைஞர் கொண்டு வந்த விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார்.
”234 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு கிடைத்துவிட்டால், அவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. சமயத்தில் நானே நல்லவனாக இருக்கமாட்டேன். சப்ஜெக்டிவ் ஏர்ரர்தானே. தனிமனிதர்களை விட்டுவிடுங்கள். ஆனால் தத்துவதை கொண்ட ஒரே கட்சி இந்தியாவில் திமுகதான்” எனவும் தெரிவித்தார்.
ஆ.ராசா பேசியதை முழுமையாக பார்க்க, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கவும்
