உத்தரப்பிரதேச மாநில போலீசார் ஒரே ஒரு எழுத்தை மாற்றி எழுதியதால் நிரபராதி ஒருவர் 17 ஆண்டுகள் வழக்கில் அலைக்கழிக்கப்பட்டு விடுதலையாகி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலியை சேர்ந்தவர் ராஜ் வீர் ( 62) இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2008ல் ராஜ் வீர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 22 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளி வந்தார். தொடர்ச்சியாக வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கிடையே ராஜ் வீரின் வழக்கு கடந்த 2012ல் மைன்புரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கு நடந்த 17 ஆண்டுகளில் ராஜ் வீர் கடும் நெருக்கடிக்கு ஆளானார். மொத்தம் 300 முறை அவர் நீதிமன்ற விசாரணைக்கு சென்றார். மேலும் அவரது சேமிப்பு கரைந்தது. நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. அவருடைய மகன் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
கடைசியாக காவல்துறையினர் ஒரே ஒரு எழுத்தை மாற்றியதால் ராஜ் வீர் 17 ஆண்டுகள் அலைக்கழிக்கப்பட்டது சமீபத்தில் தெரிய வந்தது.

ராஜ்வீரின் சகோதரர் ராம் வீர். உண்மையில் ராம் வீர்தான் குற்றவாளி. ஆனால் கோட்வாலி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவறுதலாக ராம் என்பதற்கு பதிலாக ஒரு எழுத்தை மாற்றி ராஜ் என்று எழுதி விட்டார். இதனால் ராஜ் வீர் 17ஆண்டுகளாக தன்னை நிரபராதி என நிரூபிக்க போராடி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சிறப்பு நீதிபதி ஸ்வப்னா தீப் சிங்கால், “போலீசார் மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஒரு நிரபராதி 22 நாட்கள் சிறையில் இருந்ததோடு 17 ஆண்டுகள் பொய் வழக்கை எதிர்கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.