கோவை கொடிசியா அரங்கில் இந்த ஆண்டு புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்கு பல தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. a full round on coimbatore book fair 2025
பொதுமக்களிடையே புத்தக வாசிப்பின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆண்டு தோறும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் புத்தக திருவிழா கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து பல முன்னணி பதிப்பகங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். இங்கு இலக்கியம், வரலாறு, ஆன்மீகம், போட்டித்தேர்வுகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், தன்னம்பிக்கை புத்தகங்கள் என பல தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கண்காட்சி நடைபெறும் நாட்களில் 5 அரசு பள்ளிகளில் இருந்து 200 மாணவர்களை அழைத்து வந்து புத்தக கண்காட்சியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொடிசியா சார்பில் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.

குழந்தைகளை ஈர்க்கும் புத்தகங்கள்
இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு வரும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் டிராயிங் புக், காமிக்ஸ், புதிர் மற்றும் வினா விடை புத்தகங்கள், நீதிக் கதைகள், கார்டூன் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகள் திறனை மேம்படுத்தும் நூல் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.
ஒரே நாளில் 13000 பேர்
இந்நிலையில் விடுமுறை நாளான கடந்த ஞாயிறன்று மட்டும் சுமார் 13,000 பேர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மேலும் கடந்த 4 நாட்களில் 25,000 பேர் பார்வையிட்டதாக கோவை கொடிசியா புத்தக கண்காட்சி தலைவர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்கள் கருத்து
இந்நிலையில் புத்தக கண்காட்சி ஏற்பாடுகளில் சில குறைபாடுகள் உள்ளன என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அதிக தொலைவில் உள்ளது. பல பார்வையாளர்கள் ஆன்லைன் பதிவு முறையில் சில சிக்கல்களை எதிர்கொண்டனர். பிரதான நுழைவு வாயிலில் புத்தக கண்காட்சிக்கு செல்லும் வழி குறித்த தெளிவான வரைபடங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். அரங்கின் ஒரு பகுதியில் குளிர்சாதன வசதி முறையாக பராமரிக்கப்படவில்லை. சில நேரங்களில் கொடிசியா அரங்கிற்குள் டவர் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.