கோவையில் 185 செங்கல் சூளைகளுக்கு ரூ.925 கோடி அபராதம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் 185 செங்கல் சூளைகளுக்கு ரூ.925 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தின் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சின்னத் தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக 185 செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. இங்குள்ள ஓடைகள் நீர்வழித்தடங்களில் சட்ட விரோதமாக 1.10கோடி கியூபிக் மீட்டர் அளவு செம்மண் எடுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி இந்த 185 செங்கல் சூளைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு விதிக்க சுரங்க மற்றும் புவியியல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. மாசுக்கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் இழப்பீட்டை ஆய்வு செய்து ஒவ்வொரு செங்கல் சூளைக்கும் 32 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

ADVERTISEMENT

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், டில்லியைச் சேர்ந்த தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் (TERI) நிறுவனத்தை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பையும், சுற்றுச்சூழலை மீட்டு எடுப்பதற்கான செலவுகளையும் TERI நிறுவனம் ஆய்வு செய்தது

அந்த வகையில் கோவையில் பிரச்சனைக்கு உள்ளான ஒவ்வொரு செங்கல் சூளைக்கும் இழப்பீடாக 4.39 லட்சம் முதல் 12.28 கோடி வரை வரைமதிப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு வழங்கியது .

ADVERTISEMENT

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி TERI வரைவு அறிக்கையினை 185 செங்கல் சூளைகளுக்கும் , செங்கல் சூளை சங்கங்களுக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் ரூ.925 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share