இருளிலிருந்து ஒளியை நோக்கி : கல்வியில் சாதித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்!

Published On:

| By Minnambalam Desk

a fearful disbality student now a strong guide for students

11 ஆம் வகுப்பில் தனக்குள்ள பார்வை குறைபாட்டால் அறிவியல் பாடப்பிரிவை எடுக்க தயங்கியவர், இன்று யூஜிசி நெட் தேர்வில் 6 பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்று தன்போன்ற மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் மாறியிருக்கிறார்.

இன்மையிலுருந்து இருப்பிற்கும், குறைகளிலிருந்து நிறைக்கும், விளிம்புகளிலிருந்து மையத்திற்கும் சென்ற, செல்லும் பல மனிதர்களின் கதைகளை இந்த உலகம் கேட்டிருக்கும். கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல. அந்தந்த தருணங்களில் அவர்கள் எதிர்கொண்ட கேலிகளும், புறக்கணிப்புகளும், வலிகளும், சிக்கல்களும் இன்றைய அவர்களின் புன்னகைகளுக்கு பின் இருக்கும் அழுத்தமான சுவடுகள். அப்படி தனக்கான வாய்ப்புகள் இருக்கிறதா? தன் சாதனையை உலகம் ஏற்றுக்கொள்ளுமா? எந்த வகையில் என்னை நிருபிப்பது என்ற கேள்விகளுடன் சாதனை பயணத்தை துவங்கியவர்களின் கதைகளில் ஒன்று தான் பேராசியர் சுரேசின் கதை. தனக்கு கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை வாழ்வின் மாற்றத்திற்கான விதையாய் உணர்ந்து இன்று தன்னை போன்ற பலருக்கு வழிகாட்டியாய் மாறியுள்ள இவரின் வாழ்க்கை பயணம் எப்படி இருந்தது? அவர் சொல்வது என்ன? பார்க்கலாம்.

ADVERTISEMENT

இதுகுறித்து சுரேஷ் நமது மின்னம்பலம்.காம் சார்பில் அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அவர் ”குக்கிராமத்திலிருந்து துவங்கிய எனது பயணம், ஈரோடு மாவட்டம் ஓடாநிலை அருகேயுள்ள இடைக்காட்டு வலசு கிராமம் எனது சொந்த ஊர். அப்பா லோகநாதன், அம்மா தமிழ்செல்வி. தங்கை திவ்யா. விவசாய குடும்பம் எங்களுடையது. பிறக்கும் போதே எனக்கு இடக்கண்ணில் முழு பார்வை இழப்பும், வலது கண்ணில் 10 முதல் 15% வரையிலான பார்வை திறனும் இருந்தது. குறைபாடு இருந்தாலும் மற்ற குழந்தைகளை போல நானும் படிக்கவேண்டும் என விரும்பிய என் பெற்றோர் ஊரில் உள்ள தனியார் மெட்ரிக் (நவரசம்) பள்ளியில் எல்.கே.ஜி முதல் 10 ம் வகுப்பு வரை என்னை படிக்க வைத்தனர். பள்ளி நிர்வாகமும் என் குறையை புரிந்துகொண்டு வாய்ப்பளித்தது. எனது படிப்பிற்காக என் பெற்றோர் பள்ளிக்கு அருகிலேயே வாடகை வீடு எடுத்து தங்கி என்னை படிக்க வைத்தனர். 10ம் வகுப்பில் 647/1100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தேன். அப்போது தான் கல்வியில் முக்கியமான சிக்கல் ஏற்பட்டது” என்கிறார்.

ADVERTISEMENT

இன்றைய வாய்ப்புகள் அன்று இல்லை

மேலும் அவர், “10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்ததும் நான் படித்த பள்ளியிலேயே 11ம் வகுப்பு சேர முயற்சித்தேன். இன்று கணிணியில் உள்ள ஸ்கிரின் ரீடர் போன்ற மென்பொருள்கள் அன்று இல்லை. செய்முறை தேர்வுகள் உள்ள அறிவியல் பிரிவு பார்வை சவால் கொண்டவர்களுக்கு ஏற்றதாக இல்லை. கலைப்பிரிவு மட்டுமே ஏதுவாக இருந்தது. ஆனால் நான் முன்பு படித்த பள்ளியில் கலைப்பிரிவில் கணிப்பொறி அறிவியல் பாடமும் இருந்ததால் அங்கு தொடர முடியவில்லை. அப்போது பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரலாறு பாடத்தை உள்ளடக்கிய கலைப்பிரிவு இல்லை. அப்படி இருந்த சில தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் என்னை சேர்த்துகொள்ள மறுத்துவிட்டனர். எங்கள் குடும்பத்தின் ஆன்மிக வழிகாட்டியான வராகி மணிகண்ட சுவாமியின் ஆசிரமத்தில் தங்கி காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11,12ம் வகுப்புகளை படித்தேன். 12ம் வகுப்பில் 857/ 1200 மதிப்பெண் பெற்றேன்” என்றார்.

வேறு வழியில்லாமல் எடுத்த பாடம் வழிகாட்டியானது

ஏன் ஆங்கிலத்துறை தேர்ந்தெடுத்தீர்கள்? என கேட்டபோது, “அன்றைய காலகட்டத்தில் கல்வி சார்ந்த இத்தனை விழிப்புணர்வு இல்லை. கணிப்பொறி அறிவியல், கணக்குப்பதிவியல் போன்ற பாடங்கள் இல்லாத இளநிலை பிரிவே எனக்கு சரியாய் இருக்கும் என சிலர் வழிகாட்டினர். ஆங்கிலத்தின் மீதும் விருப்பம் இருந்ததால் இளநிலை ஆங்கிலம் பட்டபடிப்பை ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் 2005-08 ஆம் ஆண்டு படித்தேன். அந்த கல்லூரியிலேயே முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தேன். ஐந்து வருட படிப்பில் ஒவ்வொரு பருவத்தேர்விலும் முதல் மதிப்பெண் பெற்று சிறந்த மாணவனாக தேர்ச்சி பெற்றதால் பார்வை சவால் கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பு சிக்கல் இருந்த அந்த காலத்திலேயே எனக்கு சுயநிதி பாடப்பிரிவில் அந்த கல்லூரியிலேயே உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 16 வருடங்களாக அங்கு பணியாற்றி வருகிறேன். பல புறக்கணிப்புகளுக்கு பின்பு தான் ஆசிரியரானேன்” என்றார்.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில், ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் உதவி பேராசிரியாக சேர்ந்த பின்பு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக எம்.ஃபில் படிப்பை முடித்து, 2018 ல் முனைவர் பட்டமும் பெற்றேன். எம்.ஃபில் படிப்பில் ஆப்ரிக்க- அமெரிக்க இலக்கியமும், முனைவர் படிப்பில் யூத- அமெரிக்க இலக்கியத்தையும் தேரந்தெடுத்திருந்திருந்தேன். ஆராய்ச்சி படிப்புக்கு பின் மதர்தெரசா பல்கலைகழகம் நடத்திய மாநிலத்தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தேன் என்றார்.

நண்பர்களின் உதவி!

அவரிடம் கடினமான தேசிய தகுதி தேர்வுகளை எதிர்கொண்டது எப்படி? என்றதற்கு, “எம்பில் மற்றும் பிஹெச்டி படிக்கும் போதே யூஜிசி நெட் தேர்வுகளுக்கு தயாராகி வந்தேன். நெட் தேர்வு எளிதானல்ல. நேசனல் கல்லூரியில் துணை முதல்வராக இருந்த முனைவர் பென்னட் ஆரம்ப காலங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தார். வார இறுதி நாட்களில் அவர் அளித்த பயிற்சியும், நண்பர்களின் உதவியும் நெட் தேர்வில் வெற்றி பெற உதவியது.

2019 ல் யூஜிசி நெட் ஆங்கிலப்பிரிவில் தேர்ச்சி பெற்றபின்பு தான் இதர உட்பிரிவுகளிலும் தேர்வு எழுதலாம் என தெரியவந்தது. இதையடுத்து 2020ல் பழங்குடி இலக்கியம், 2021ல் மொழியியல் , 2023ல் பெண்கள் கல்வி, 2024 ல் ஒப்பீட்டு இலக்கியம், 2025ல் இந்திய அறிவு அமைப்பு பிரிவுகளிலும் தேர்ச்சியடைந்தேன். குறிப்பாக மொழியியல் நெட் தேர்வில் ஜே.ஆர்.எஃபில் தேர்ச்சி பெற்றேன்” என தனது நெட் தேர்வு சாதனைகளை பகிர்ந்து கொண்டார்.

நெட் தேர்வர்களுக்கு வழிகாட்டி!

தொடர்ந்து அவர், “நான் படிக்கும் காலத்தில் நெட் தேர்வு எழுதும் பார்வை சவால் கொண்டவர்கள் மற்றவர்களை போல் பாடப்புத்தகங்களை எடுத்து வாசிக்க முடியாது. மற்றவர்களை வாசிக்க சொல்லவேண்டும். ஒலிப்பதிவு அல்லது திரை வாசிப்பு ஆகியவற்றின் மூலமே படிக்க முடியும். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் மொபைல்போனில் டாக் பேக், கணிணியில் என்விடிஏ மென்பொருட்கள் மூலம் மற்றவர்கள் துணையில்லாமல் படிக்க முடியும். 2010 ல் முதுகலை முடித்த போது எனக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அப்போது ஸ்கிரீன் ரீடர் கூட குறைவான அளவே மக்களை சென்றடைந்திருந்தது. இதனால் படிப்பதற்கு மிகுந்த சிரமும், மற்றவரின் உதவியும் தேவைப்பட்டது. இதன்பின்பு தான் ஸ்கீரின் ரீடர் பிரபலமடைந்தது.

மேலும் என்னை போன்ற பார்வை சவால் கொண்டவர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் முதுகலை படிப்பின் போதே நெட் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். பெரும்பாலான கல்லூரிகளில் பட்டப்படிப்பிற்கான பாடத்தை மட்டுமே சொல்லி தருவார்கள். சில பல்கலைக்கழங்களில் மட்டும் நெட் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. நான் படிக்கும காலத்தில் ஆங்கில நெட் தேர்விற்கான சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை வாட்ஸ் ஆப் குருப் மூலம் பகிர்ந்து இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். 700 உறுப்பினர்கள் உள்ள அந்த குழுவில் 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெட் தேர்வில் நான் மட்டும் வெற்றி பெற்றால் போதாது போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் தவிக்கும் மாணவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்து வருகிறேன். நான் பணியாற்றும் கல்லூரியிலும் ஆங்கில நெட் தேர்வு ஆன்லைன் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்” என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

அங்கீகரித்தலே வெற்றிக்கான வழி

இறுதியாக, “நான் பணியாற்றும் கல்லூரியினர் தொடர்ந்து 15 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்த ஆசிரியர் என்ற அங்கீகாரமே என்னை தொடர்ந்நு பயணித்து சாதிக்க உதவியது. ஆரம்ப காலத்தில் கல்வி துறையில் இருப்பவர்கள் கூட மாற்றுத்திறனாளிகள் சலுகை மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுகின்றனர் என விமர்சித்து வந்தனர். விமர்சனங்களை எல்லாம் தாண்டி வரவேண்டும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும் என்ற ஊக்கமே என்னை தேர்வுகளை எழுத வைத்தது. எனது இந்த பயணத்திற்கு எனது குடும்பத்தினரின் தியாகமும், வராகி மணிகண்ட சுவாமியின் வழிகாட்டுதலுமே காரணம். தொடர்ந்து உயர்கல்வியில் என்னென்ன துறைகளில் வாய்ப்புகள் உள்ளதோ அதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கவேண்டும். அவர்களின் வாசிப்புத்திறனை அதிகப்படுத்த வேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவர்களை வெற்றியடைய செய்யவேண்டும் என்பதே என் வாழ்க்கைக்கான கனவு” என மிக நம்பிக்கையோடு தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share