நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இட்லி கடை படத்தில், அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. விடுமுறை நாளான இன்று தனுஷ் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் படத்தை பார்க்க குவியத் தொடங்கி உள்ளனர்.
கோவையிலும் பல்வேறு திரையரங்குகளில் இட்லி கடை திரைப்படம் வெளியாகி உள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் பலரும் ஒரே மாதிரி இட்லி கடை திரைப்பட புகைப்படம் அச்சிடப்பட்ட டிசர்ட் அணிந்து வந்து உற்சாக முழக்கத்துடன் படம் பார்க்க சென்றனர்.
அப்போது திரைப்படம் பார்க்க வந்த ஷியாம் என்ற தனுஷின் தீவிர ரசிகர் ஒருவர் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாபாத்திரம் போலவே வேஷ்டி சட்டை துண்டு அணிந்து நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு படத்தை காண்பதற்கு ஆர்வமுடன் வருகை புரிந்தார். அவரை தனுஷ் ரசிகர்கள் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.