மன அழுத்தத்தை குறைப்பதற்கு பாட்டு கேட்பது, தியானம் செய்வது, நடைபயிற்சி மேற்கொள்வது என எத்தனையோ வழிகள் உள்ளன.
ஆனால் சீனாவைச் சேர்ந்த லி என்ற நபர், மன அழுத்ததால் பாதிக்கப்பட்ட நிலையில் அதை போக்குவதற்கு அவர் கையிலெடுத்த முறை பலரையும் திகைக்க வைத்துள்ளது.
தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், ஏதாவது ஒரு வீட்டிற்குள் நுழைந்து, அந்த வீட்டில் உள்ளவர்களை மயங்க செய்து, அவர்களின் ரத்தத்தை ஊசியால் உறிஞ்சுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் லி.
அதன்படி கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில், தென்கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்சோவில் உள்ள யூ என்ற பெண்ணின் வீட்டிற்குள் அப்படி நுழைந்தார்
அங்கு படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்த யூவின் முகத்தில் மயக்க மருந்து நனைத்த கருப்புத் துணியைப் பயன்படுத்தி மயக்கமுற செய்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த ஊசியால் ரத்தத்தை உறிஞ்சி எடுத்துள்ளார் லி.
அந்த நேரத்தில் பெண்ணின் கணவர் வீட்டுக்குள் திரும்ப, தனது மனைவியின் கையில் இருந்து, ஒருவன் ரத்தத்தை உறிஞ்சுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக லியைத் தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, கைதான லி மீது ஏற்கெனவே திருட்டு, பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோதமாக நுழைந்ததற்கான வழக்குகளில் சிக்கியுள்ளது தெரியவந்தது.
மேலும் நீதிமன்றத்தில் லி, “மற்றவர்களின் வீடுகளுக்குள் பதுங்கிச் செல்வதை நான் ரசிக்கிறேன். இது எனக்கு ஒரு சிலிர்ப்பைத் தருகிறது, இது என் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது” என்று எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தெரிவித்தார்.
இதனையடுத்து லிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு சீனாவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த நிலையில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது மிகவும் குறைவு என பலரும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
பயனர் ஒருவர், “அவரது செயல்கள் தெளிவாகத் திட்டமிடப்பட்டவை. அது எப்படி வேண்டுமென்றே தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படவில்லை? பாதிக்கப்பட்டவருக்கு உடல் அல்லது உளவியல் அதிர்ச்சி ஏற்படவில்லையா?
இந்த மனிதனுக்கு திருட்டு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவியல் வரலாறும் உள்ளது; அவருக்கு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா? மீண்டும் குற்றம் செய்ய அவருக்கு பல வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.