திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த மினி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் பி.கே.என் ஆரம்பப்பள்ளி மற்றும் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் மினி பேருந்தில் திருமங்கலம் அருகில் உள்ள கிராமங்களான சௌடார்பட்டி, கிழவனேரி, ஆலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வருவது வழக்கம். இன்று காலை1 முதல் 8 ம் வகுப்பு வரையில் பயிலும் 24 பள்ளி குழந்தைகளை பேருந்து ஓட்டுநர் ரவிச்சந்திரன் என்பவர் வழக்கம்போல் அழைத்து வந்தார்.
பள்ளி குழந்தைகளுக்கு உதவியாக பாண்டியம்மாள் என்பவர் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். பேருந்து ராஜபாளையம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விருதுநகர் – மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் இருந்து திடீரென புகை வந்ததால் ஓட்டுநர் ரவிச்சந்திரன் சுதாரித்து உடனடியாக பேருந்தை நிறுத்தினார். உதவியாளருடன் பள்ளி குழந்தைகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறக்கி விட்டனர்.
பேருந்தில் இருந்து புகை வருவதைக் கண்டு அப்பகுதியில் இருந்த பேக்கரி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளி மாணவர்களை துரிதமாக செயல்பட்டு மீட்டனர். இதனால் நல்வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.
மாணவர்களை மீட்ட சில நிமிடங்களில் பேருந்தில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைப்பதற்குள் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது. இதை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் தீயை மேலும் பரவ விடாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பேருந்தில் தீ பற்றியது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் அனைவரையும் பத்திரமாக மாற்று பேருந்தில் பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த மினி பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
