ரவுடி மீது நாட்டு வெடி குண்டு வீச்சு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே ரவுடியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரவுடி காளி என்கிற வெள்ளகாளி. இவர் மீது ரவுடி வெள்ளைக்காளி மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சென்னை புழல் சிறைக்கு போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லும் போது, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ஓர் ஹோட்டலில் உணவு அருந்தச் சென்றனர்.

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, காளியை வெட்ட முயன்றது. போலீசார் தடுக்க முயன்றபோது, போலீஸ் ஜீப் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி உள்ளிட்ட காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ADVERTISEMENT

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில்,
ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share