கரூர் கூட்ட நெரிசலில் பலியான சிறுவன் பிரித்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், சிபிஐ விசாரணைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், ’அவர் எங்களை விட்டு 8 வருடமாக பிரிந்துள்ளார். காசுக்காக சிலரின் தூண்டுதலின் பேரில் வழக்கு போட்டிருக்கலாம்’ என அவரது மனைவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்தது.
இருப்பினும், இந்த வழக்கில் சதி இருக்கிறது என்றும், எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறும், பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் மனுதாரர் உமா ஆனந்தன் இந்த விவகாரத்திற்கு தொடர்பில்லாத நபர் என்பதால் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 13 வயதான பிரித்திக் என்ற சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கூட்ட நெரிசலில் பலியான சிறுவன் பிரித்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், 8 ஆண்டுகளுக்கு முன்பே குழந்தையையும், தன்னையும் விட்டுவிட்டுச் சென்றதாகவும், அவரது உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது மனைவி ஷர்மிளா கூறியுள்ளார்.
காசுக்காக… தூண்டுதலின் பேரில் வழக்கு!
சமீபத்தில் அவர் டிரைப்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “எனது கணவர் என்னை விட்டு பிரிந்து 8 வருடம் ஆகிவிட்டது. உச்சநீதிமன்றத்தில் எனது கணவர் வழக்கு போட்டதே தெரியாது. உயிரிழந்த மகனுக்காக அவர் ஒரு சொட்டு கண்ணீர் கூட அவர் விடவில்லை. சுடுகாட்டுக்கு வந்து எட்டிப்பார்த்து போய்விட்டார். அவன் என்ன படிக்கிறான், என்ன வயசு என்பது கூட அவருக்கு தெரியாது. இந்தநிலையில் காசுக்காக சிலரின் தூண்டுதலின் பேரில் வழக்கு போட்டிருக்கலாம் என நினைக்கிறேன்” என்றார்.
மேலும் அவர், ”தவெக சார்பில் தொடர்பு கொண்ட அக்கட்சி நிர்வாகிகள், செக்கை கணவர் வங்கி கணக்கில் போட அழுத்தம் கொடுப்பதாகவும், பையன் யாரிடம் இருந்தான், ஆதாரம் இருந்தால் அனுப்புங்கள் எனவும் கூறினர். அதற்கான ஆதாரங்களை அவர்களிடம் அனுப்பியுள்ளேன். விஜய்யும் நான்கு நாட்களுக்கு முன்னர் வீடியோ காலில் பேசினார். அவர் நேரில் வந்து சந்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்” என பேசியுள்ளார்.