வெனிசுலா எண்ணெய் வயல்களில் கால்வைக்க ஒரு கொல்லைப்புற அரசியல் –1

Published On:

| By Mathi

venezuela

அ. குமரேசன்

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வெனிசுலா மக்களைப் பொறுத்தவரையில் நாடே அவமதிக்கப்பட்ட ஒரு பெரும் துக்கமாகவே அமைந்தன. ஜனவரி 3 அன்று அதிகாலை, அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது நேரடி வான்வழித் தாக்குதலை நடத்தியது. வெனிசுலா அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ, அவரது இணையர் சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க அதிரடிப் படையினர் கைது செய்து நியூயார்க்கிற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT

மதுரோ மீது ‘போதைப்பொருள் பயங்கரவாதம்’, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு சுமத்தியுள்ளது. “அதிபர்” டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவில் ஒரு நிலையான ஆட்சி அமையும் வரை அமெரிக்காவே அந்நாட்டை நிர்வகிக்கும் என்று அறிவித்தார். உலக அளவில் கடுமையான எதிர்ப்புகள்  எழுந்த பின்னணியில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் (ஸ்டேட் செக்ரடரி) மார்க்கோ ரூபியோ அறிவிப்பு அதைக் கொஞ்சம் மென்மைப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. “வெனிசுலாவின் அரசாங்க நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடாது, எண்ணெய் வயல்கள் நிர்வாகத்தை மட்டுமே மேற்கொள்ளும்,” என்று அவர் அறிவித்திருக்கிறார்.

ரூபியோ என்னதான் மென்மைப்படுத்தியிருந்தாலும், டிரம்ப் நோக்கத்தின் கடுமையை மறைப்பதற்கில்லை. வெனிசுலா பொருளாதாரமே எண்ணெய் வயல்களைத்தான் 90 சதவீத அளவுக்குச் சார்ந்திருக்கிறது. அந்த நிர்வாகத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம் என்றால், அந்த நாடே அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் என்றுதான் பொருள்.

ADVERTISEMENT

முன்னதாக, கைது நடவடிக்கை முடிந்ததும் டிரம்ப் இவ்வாறு அறிவித்தார்: “நமது மகத்தான அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் உள்ளே இறங்கத் தயாராக உள்ளன. அவர்கள் அந்த எண்ணெய் வயல்களைச் சீரமைப்பார்கள்,  எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைச் சரிசெய்வார்கள். அமெரிக்காவின் எரிசக்தி மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில், வெனிசுலா மக்களுக்கு மீண்டும் செழிப்பைக் கொண்டு வருவோம்.”

இது எப்படி இருக்கிறது? சில சினிமாக்களில் வில்லன்களின் குற்றங்களை யாராவது சுட்டிக்காட்டினால், “ஆமா, நான் இப்படிப்பட்டவன்தான், அதுக்கு என்னாங்குற,” என்று திமிருடன் கேட்பதாகக் காட்சிகள் வரும். எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவே இந்த நடவடிக்கை என்று உலகெங்கும் கண்டனக் குரல்கள் எழும் நிலையில், அந்த சினிமா ஆணவத்தின் உலக அரசியல் காட்சியாக டிரம்பின் அறிவிப்பு இல்லையா! இதிலே, வெனிசுலா மக்களுக்கு செழிப்பு என்ற சமாளிப்பு வேறு!

ADVERTISEMENT

கட்டிவிட்ட கதை

இப்படி ஒரு சுதந்திர நாட்டின் அரசுத் தலைவரை இன்னொரு நாடு கைது செய்து கொண்டுபோக முடியுமா என்று பலருக்கும் வியப்பாக இருக்கும். ஆனால், இதன் முன்கதைகளாக அரசியல், பொருளாதாரம், தேர்தல், மக்கள் மனநிலை என்ற பின்னணிகள் இருப்பதைத் தெரிந்துகொண்டால் அந்த வியப்பு நீங்கும்.

உலக நாடுகளில் மிகப் பெரிய அளவுக்குக் கச்சா எண்ணெய் இருப்பைக்  கொண்டிருப்பது வெனிசுலா. நிலத்தடியில் சுமார் 30,000 கோடி பீப்பாய்கள்  எண்ணெய் வளம் இருக்கிறது. இந்த வளத்தில் இதுவரை வெளியே எடுக்கப்பட்டிருப்பது வெறும் 1 சதவீதம் மட்டுமே. மீதியிருக்கிற அந்த 99 சதவீத எண்ணெய் மீதுதான் டிரம்ப்புக்குக் கண்.  அதாவது, அமெரிக்காவின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனங்களுடைய கண்ணாகச் செயல்பட்டிருக்கிறார்.

நேரடியான வணிக ஒப்பந்தங்களுக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில்தான்,  வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கதை கட்டிவிடப்பட்டது. போதைப் பொருள்களால் இளையதலைமுறையினர் சீரழிவதைக் காண்கிற பெற்றோர்களும் மற்றவர்களும் இப்படியொரு காரணத்தைக் கூறினால், அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற கணக்கும் அதில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்தே கரீபியன் கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்கக் கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

சென்ற ஆண்டு ஜனவரியில் மதுரோ மூன்றாவது முறையாக அரசுத் தலைவர் பொறுப்பேற்றார். அவருடைய வெற்றியைத் தடுக்கவும், தனது நோக்கங்களுக்குத் தோதானவர்களைத் தேர்ந்தெடுக்க வைக்கவும் பல உள்ளடி வேலைகளைச் செய்த டிரம்ப் தோற்கடிக்கப்பட்டார். மதுரோ தேர்ந்தெடுக்கப்பட்டது ‘சட்டவிரோதம்’ என்று அறிவித்தார்! அமெரிக்காவின் தொடர்ச்சியான கெடுபிடிகளால் வெனிசுலாவின் பொருளாதாரம் 75 சதவீதம் சுருங்கிவிட்டது. உணவுப் பொருட்கள்,  மருந்துகள் தட்டுப்பாட்டால் லட்சக்கணக்கான மக்கள் கடந்த காலங்களில் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

முன் பகை

மதுரோ ஆட்சிக்கு முன், வெனிசுலா அரசுத் கலைவராக ஹியூகோ சாவேஸ் பொறுப்பேற்றதிலிருந்தே அமெரிக்க அரசின் பகை  கொடங்கிவிட்டது. வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளைத் தனது  கொல்லைப்புறமாகவே கருதுகிற  அமெரிக்க அரசின் மன்றோ கோட்பாட்டிலிருந்து, அதற்கான கதவை சாவேஸ்  மூடிவிட்டார் என்ற ஆத்திரத்திலிருந்து மூண்ட பகை அது.

அதென்ன கொல்லைப்புறக் கோட்பாடு?  1823இல் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோ  ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கக் கண்டத்தில் எந்தவொரு நாட்டையும் காலனியாக்குவதைத் தடுக்கவென்று ஒரு கோட்பாட்டை அறிவித்தார். “அமெரிக்கக் கண்டத்தில் எந்த நாட்டில் ஐரோப்பிய அரசுகள்  தலையிட்டாலும் அது  அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாகவே கருதப்படும், ஆகவே அவர்கள் இந்தப் பக்கம் வரக்கூடாது, பதிலுக்கு ஐரோப்பிய அரசுகளின் காலனிப் பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடாது,” என்பதே அந்தக் கோட்பாடு.

லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட இந்தக் கோட்பாட்டில், 1904இல் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்  ஒரு திருத்தத்தைச் சேர்த்தார். அதன்படி, எந்தவொரு லத்தீன் அமெரிக்க நாடாவது “தவறு” செய்தால், அல்லது பொருளாதார நெருக்கடியில் சிக்கினால், அங்கு “அமைதியை நிலைநாட்ட” அமெரிக்கா ராணுவத்தை இறக்கிவிட “உரிமை” உண்டு. சொந்தவீட்டுக் கொல்லைப்புறத் தோட்டத்தில் ஓய்வெடுக்கவும் மண்ணைத் தோண்டவும் செடியைப் பிடுங்கவும் செடியை வைக்கவும் உள்ள உரிமை போன்ற இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே, அமெரிக்க அரசு தனது விருப்பத்திற்கு ஒத்துவராத லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களைக் கவிழ்ப்பது, கலவரங்களைத் தூண்டுவது, ராணுவத்தை அனுப்புவது போன்ற செயல்களைச் செய்து வந்திருக்கிறது.

வெனிசுலா வளர்ச்சிக்கு ரஷ்யா, சீனா நாடுகள் உதவுவதை அமெரிக்க அரசு விரும்பவில்லை.  தனது மேற்கு எல்லைக்கு அப்பால் தனக்கு விசுவாசமாக இல்லாத ஓர் அரசாங்கம் இருப்பதை தனது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே அமெரிக்க ஆட்சியாளர்கள் உள்நாட்டளவில் சித்தரிக்கிறார்கள். இது, அத்துமீறலின் ஒரு முகம். இன்னொரு முகம் – அப்பட்டமான இயற்கை வளக் கொள்ளை. அதையும் தெரிந்துகொண்டால் ஏகாதிபத்தியப் புத்தியின் முழு அகமும் தெளிவாகும்.

சாவேஸ் எழுச்சி

சுமார் 300 ஆண்டுகள் ஸ்பெயின் அரசின் ஒரு காலனி நாடாக இருந்தது வெனிசுலா. 1811ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது வெனிசுலா. அதன் பிறகும் கூட ஸ்பெயின் ராணுவம் அங்கே அட்டூழியங்களைச் செய்துவந்தது, 1821இல் அதற்கும் முடிவுகட்டப்பட்டது. ஆயினும் நாட்டு மக்களிடையே கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவியது. ஊழல் தாண்டவமாடியது. 

இந்தச் சூழலில் 1990-களில் ஹியூகோ சாவேஸ் ஒரு புரட்சிகர சக்தியாக உருவெடுத்தார். எழுச்சிகரமான போரராட்டங்களை முன்னெடுத்தார். 1998 தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் அரசுத் தலைவரான சாவேஸ், “21ஆம் நூற்றாண்டு சோசலிசம்” என்ற கொள்கையை அறிவித்தார். மார்க்சிய–லெனினியக் கண்ணோட்டங்களோடு, லத்தீன் அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வீரர் சீமொன் பொலிவார் முன்வைத்த தேசியச் சிந்தனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கொள்கை அது.

இந்தக் கொள்கையின் முக்கியக் கூறு, பங்கேற்பு ஜனநாயகம். தேர்தலின் மூலம் நாடு முழுவதற்குமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதுடன், உள்ளூர் சமூகக் குழுக்களையும் மக்களே அமைப்பார்கள். அந்தக் குழுக்களின் வழியாக மக்கள் நேரடியாகவே ஆட்சி நிர்வாகத்தில் பங்களிப்பார்கள். மக்களின் அதிகாரத்துக்கு இட்டுச் செல்வது இது.

அந்தக் கொள்கையின் மற்றொரு முக்கியக் கூறு – மனிதநேயப் பொருளாதாரம். வணிகநேயத்தை விட மனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை. இந்தப் பார்வையோடு பொருளாதாரத்தில் உயர் தன்னாளுமை உரிமையை அறிவித்தார். எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எதுவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருக்கக்கூடாது. அவை நாட்டு மக்களுக்கே சொந்தம்.

(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share