தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியாகியுள்ளது.
சுமார் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்வதற்கு முன் தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் இருந்தனர்.
இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி 5 கோடியே 43 லட்சத்து 76ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் – 2,66,63,233 பேர் .
பெண் வாக்காளர்கள் – 2,77,06,332 பேர்
மாற்று பாலின வாக்காளர்கள் -7191
மாற்றுத் திறனாளிகள்- 4,19,355 ஆகியோர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
நீக்கப்பட்டவர்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக தமிழ்நாட்டில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவிகிதமாகும் ஆகும்.
குறிப்பாக இறந்தவர்கள் என 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் என்று 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இரட்டை வாக்குரிமை பெற்றவர்கள் என்று 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேரின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் பி.எல்.ஓ, இ.ஆர்.ஓ, சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் படிவர் 6 -ஐ ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுமட்டுமின்றி அடுத்த இரு வாரங்களுக்கு வார இறுதியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதிலும் விண்ணப்பிக்கலாம். 12 ஆயிரம் பேர் எஸ்.ஐ.ஆர் படிவங்களை திருப்பி வழங்கவில்லை” என்று தெரிவித்தார்.
நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள https://erolls.tn.gov.in/asd/ இந்த லிங்க்கில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சம்மிட் கொடுக்க வேண்டும்.
அதாவது, உங்கள் மாநிலம், மாவட்டம், எந்த சட்டமன்ற தொகுதி மற்றும் உங்கள் வாக்குச்சாவடி விவரங்களை கொடுத்து ’வீயூ’ என்ற பட்டனை க்ளிக் செய்தால் அந்த பூத்தில் நீக்கப்பட்டவர்களின் பட்டியல் இடம் பெற்றிருக்கும். அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
https://erolls.tn.gov.in/rollpdf/acwise_pdf.aspx … இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை உள்ளிட்டு, எந்த மாநிலம் என்பதை தேர்வு செய்து, கேப்ட்சாவை பதிவிட்டால்… அதில் உங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.
