கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்காக 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 26) வெளியிட்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 341 கோடியே 77லட்சம் ரூபாய் செலவிலான 2559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 386 கோடியே 48லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு இன்று (டிசம்பர் 26) அடிக்கல் நாட்டினார்.
இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. ரிஷிவந்தியம் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைப்படி, வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும். மேலும், ரிஷிவந்தியத்தில், 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஊராட்சி ஒன்றியக் கட்டடம் கட்டப்படும்.
2.புதிதாக அமைக்கப்பட்டுள்ள உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும்.
3.உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள சேந்தநாடு கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவில், புதிய சிட்கோ தொழிற்பேட்டை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்படும்.
4. சங்கராபுரம் பகுதி பொதுமக்களுக்குப் பயனளிக்கின்ற வகையில், புதுப்பாலப்பட்டு கிராமத்தில், 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
5.சின்னசேலம் வட்டத்தில், 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் கட்டப்படும்.
6. திருக்கோயிலூர் பகுதி விவசாயிகளின் நலனுக்காக, அரியூர் கிராமத்தில், 5 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
7.கல்வராயன் மலைப் பகுதி பழங்குடியின மகளிர் பயன்பெறும் வகையில், “மகளிர் விடியல் பயணம்” திட்டம் விரிவுபடுத்தப்படும்.
8.புதிதாக அமைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் அமைக்கப்படும்.
