ராஜ்தாணி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 7 யானைகள் உயிரிழந்திருப்பது விலங்குகள் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் சாய்ராங் – புது டெல்லி இடையே ராஜ்தாணி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றிரவு புறப்பட்ட ராஜ்தாணி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20507) இன்று அதிகாலை அசாம் மாநிலத்தை கடந்து கொண்டிருந்தது.
அப்போது ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள ஜமுனாமுக் – கம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது அதிகாலை 2.17 மணிக்கு தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. ஒரு யானை குட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“ரயில் வந்துகொண்டிருந்த போது சுமார் 100 யானைகள் கூட்டமாக கடக்க முயன்றதாகவும், அடர் பனி காரணமாக அருகில் வந்த போதுதான் யானைகள் கடப்பதை லோகோ பைலட் பார்த்து அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது” என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.
யானைகள் மீது ரயில் மோதியதில் இன்ஜின் உட்பட 5 பெட்டிகள் தடம்புரண்டு நின்றுள்ளன. இந்த ரயிலில் சுமார் 600க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கவுகாத்திக்கு அனுப்பப்பட்டனர்.
இன்று அந்த வழிதடத்தில் 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த யானைகளுக்கு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

விபத்து நடந்த பகுதி “யானைகள் நடமாட்ட வழித்தடம்” (Elephant Corridor) இல்லை என்றும் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே கூறியிருக்கிறது.
கடந்த 2010 முதல் 2020 வரை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ரயில் மோதி 186 யானைகள் பலியாகியுள்ளன.
கடந்த 2020 முதல் 2024 வரை 5 ஆண்டுகளில் 79 யானைகள் உயிரிழந்திருப்பதாக மத்திய சுற்றுசூழல் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது.
இந்தசூழலில் ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுக்கப் போதுமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நீண்டகாலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
