ADVERTISEMENT

முப்பெரும் விழா முழக்கம்: ஓரணியில் தமிழ்நாடு! தலைகுனியா தமிழ்நாடு!

Published On:

| By Minnambalam Desk

76th Anniversary of DMK Mupperum Vizha in Karur

ராஜன் குறை 

தமிழ்நாட்டு வரலாற்றின், இந்திய வரலாற்றின் முக்கியமான தருணத்தில் கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. கழகம் துவங்கி எழுபத்தாறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தியாவில் இன்றுள்ள அரசியல் கட்சிகளில் வெகு சில கட்சிகளே திமுகவைப்போல் நீண்ட வரலாறு கொண்டவை எனலாம். காங்கிரஸ், அகாலி தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி என ஒரு சில கட்சிகளே திமுகவை விட கொஞ்சம் அதிக வயதைக்கொண்டவை. அந்த கட்சிகளிலும் கூட ஒரு மக்கள் தொகுதியை கட்டமைத்து அதன் வரலாற்றை செதுக்கிய அளவில் காங்கிரஸ் மட்டுமே தி,மு.க-விற்கு இணையாக நிற்க முடியும். 

அகாலி தளம் பஞ்சாபின் கட்சியாக இருந்தாலும் அது சீக்கியர்களின் கட்சியாகவே அடையாளப் படுத்தப்பட்டது. அதனால் அது அங்கே காங்கிரசுடன் ஆட்சியை பரிமாறிக் கொள்கிறதே தவிர, பஞ்சாப் மாநில மக்களின் ஒருங்கிணைந்த அடையாளத்தை உருவாக்குவதில் அது தனிப் பங்கினைக் கோர முடியாது. கம்யூனிஸ்டு கட்சி தொழிலாளர்களை, விவசாயிகளை ஒருங்கிணைப்பதில், அவர்கள் உரிமைகளை, நலன்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருந்தாலும், அது ஒரு வெகுஜன அடையாளமாக மக்கள் தொகுதியினை உருவாக்கவில்லை. 

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுச் சாதனை என்னவென்றால் இந்திய ஒன்றியத்தினுள் சுயாட்சி கோரிக்கை கொண்ட திராவிட-தமிழர் என்ற மக்கள் தொகுதியை உருவாக்கிக் காட்டியதுதான். திராவிட தமிழரின் நலன்களைக் காக்க தி.மு.க தமிழ் தேசிய விடுதலை என்ற கோரிக்கையை முன்னெடுக்கவில்லை; அப்படிச் செய்திருந்தால் காஷ்மீர், காலிஸ்தான், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றின் தனி நாட்டுக் கிளர்ச்சிகளைக் கையாண்டதுபோல ஆதிக்க சக்திகள் கையாண்டிருப்பார்கள். 

அதற்கு மாறாக பெரியாரும், அண்ணாவும் குடியரசு விழுமியங்கள் குறித்தும், கூட்டாட்சியம் குறித்தும் பேசியதால், திராவிட நாடு என்ற கூட்டாட்சிக் குடியரசையே வலியுறுத்தியதால் இன்றளவும் அதனை எதிர்கொள்ள முடியாமல் ஆளுனர் ரவி போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் திணறுகிறார்கள். திராவிடம் என்ற சொல் அவர்களுக்கு எட்டிக்காயாகக் கசப்பது ஏன் என்பதை நாம் புரிந்துகொண்டால்தான் தி.மு.க வரலாற்றின் முக்கியத்துவம் புரியும். பெரியாரும், அண்ணாவும் சட்டையில் பேட்ஜுபோல குத்திக்கொள்ள தனி நபர்களின் பெயர்களல்ல; அவை அரசியல் தத்துவத்தின் பெயர்கள். அந்த தத்துவம்தான் இன்று ஓரணியில் தமிழ்நாடு; தலைகுனியா தமிழ்நாடு என முழங்கி நிற்கிறது.

ADVERTISEMENT

திராவிட இயக்கத்தின் தத்துவப் போர் 

தி.மு.க-வின் வரலாறு இரண்டு முக்கியமான போர்முனைகளை உள்ளடக்கியது. ஒன்று முதல்வர் ஸ்டாலின் தன் பேச்சில் குறிப்பிட்டபடி ஈராயிரம் ஆண்டுப் போர். அது சமஸ்கிருதத்தில் எழுதிய ஆரிய பண்பாட்டின் வர்ண தர்ம கோட்பாட்டிற்கும், தமிழில் எழுதிய திராவிட பண்பாட்டின் சமத்துவ கோட்பாட்டிற்கும் இடையேயான போர். சூத்திரர்கள் என்றும். பஞ்சமர்கள் என்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போர். அதனுடன் தொடர்புடைய மற்றொரு போர், இந்திய ஒன்றிய அரசாங்கத்திடம் குவிக்கப்படும் அதிகாரங்களுக்கும். ஒன்றியத்தினை உருவாக்கும் மாநில அரசுகளின் சுயாட்சி அதிகாரங்களுக்கும் இடையேயான உரிமைப் போர். 

இன்றைக்கு அகில இந்திய அரசியலே திராவிட இயக்கத்தின் கொள்கை அடிப்படையில் முரண்பட்டு நிற்கிறது. வர்ண தர்ம மீட்புவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-சின் அங்கமான பாரதீய ஜனதா கட்சி ஒன்றிய அரசில் அதிகாரங்களைக் குவித்து மாநில அரசுகளை முற்றிலும் ஒடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்துத்துவம், இந்திய தேசியத்தின் ஒற்றுமை என்ற பெயரில் அறிவியலுக்கு எதிரான பத்தாம்பசலி கொள்கைகளைப் பரப்புவது, சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான சட்டங்களையும், பாசிச மன நிலையையும் உருவாக்குவது, பெருமுதலீட்டிய ஆதரவின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை காவு கொடுப்பது என்று செயல்படுகிறது. 

ADVERTISEMENT

இந்திய சுதந்திரப் போரை வழிநடத்திய காங்கிரஸ் கடந்த காலங்களில் அனைத்து மாநிலங்களிலும் பெருமளவில் அதுவே ஆட்சி செய்ததால் மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவில்லையானாலும், இன்றைக்கு பாஜக-வின் விபரீதப் போக்கைக் கண்டு மாநில சுயாட்சியின் தேவையை உணர்கிறது. ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில், மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான சமூக நீதி ஆகியவற்றை தனது முக்கிய கொள்கைகளாக முன்னெடுத்து வருகிறது. 

சுருக்கமாகச் சொன்னால் இன்றைய இந்தியாவின் அரசியல் முரண் இதுதான்:  

76th Anniversary of DMK Mupperum Vizha in Karur

இந்த முரண்களை நாம் விரிவாக ஆராய்ந்தால், தி.மு.க இந்தியா கூட்டணியின் அங்கம் மட்டுமல்ல, அதன் கொள்கைகளுக்காக துவக்கம் முதலே போராடி வரும் கட்சி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதன் காரணமாகவே இந்திரா காந்தியுடனும், பின்னர் சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரசுடனும் தி.மு.க கூட்டணி கண்டது. தேவைப்பட்ட போது காங்கிரசுடன் முரண்பட்டு வெளியேறிய வி.பி.சிங் போன்ற முற்போக்கு நோக்கம் கொண்ட தலைவர்களுடன் இணைந்தது. தமிழ்நாட்டு நலன்களை முன்னெடுப்பது மட்டுமன்றி, அகில இந்திய அளவில் வர்ண தர்மத்தால் பாதிக்கப்பட்ட அனைவரின் நலன்களையும் முன்னெடுக்கும் இயக்கங்களுடன் இணைந்து பயணித்தது. 

இத்தகைய விரிவான வரலாற்றுப் பின்புலத்தில்தான் நாம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தையும், தலைகுனியாத தமிழ்நாடு என்ற முழக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.  

ஓரணியில் தமிழ்நாடு 

ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியின் நலன் களை முன்னெடுக்க பல கட்சிகள் இயங்கலாம். இவை தேர்தல் களத்தில் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கலாம். ஆனால் அந்த மக்கள் தொகுதியின் நலன் என்று வரும்போது, அந்த நலனுக்கு ஆபத்து வரும்போது ஓரணியில் நிற்க வேண்டும்.

உதாரணமாக இந்திய தேசிய காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் இந்தியர்கள் என்ற மக்கள் தொகுதியின் பொது நலனை முன்னெடுக்கும் கட்சிகள் என்ற போதும், கொள்கை வேறுபாடுகள் காரணமாக தேர்தல் களத்தில் எதிரெதிரே நிற்பவை. ஆனால் இந்திய மக்கள் நலனுக்கு அன்னிய சக்திகளாலோ, இயற்கை பேரிடர்களாலோ ஆபத்து ஏற்பட்டால் அவை ஓரணியில் மக்களுக்காகத்தான் செயல்பட வேண்டும். 

அதே போல, திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியின் நலனைத்தான் தி.மு.க-வும், அ.இ.அ.தி.மு.க-வும் முன்னெடுக்கின்றன என்னும்போது அந்த நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதனை கண்டிப்பதில் ஓரணியில் நிற்க வேண்டும். தேர்தல் கள மோதல் வேறு; உரிமைகளுக்காக ஒன்றுபட்டு நிற்பது வேறு. 

உதாரணமாக மருத்துக் கல்வி தொடர்பான தமிழ்நாட்டின் நிலைபாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாடு அரசு, குறிப்பாக கலைஞர் முன்னெடுப்பில், மருத்துவக் கல்வி என்பதில் பின் தங்கிய வகுப்பினரும் பெருமளவில் பங்கேற்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் உடல் நலம் சார்ந்த குறியீடுகளில் மாநிலம் வெகுவாக முன்னேறியதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த நிலையை சீர்குலைக்கும் வகையில் நீட் தேர்வை கட்டாயமாக்கியது பாஜக அரசு. நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிமுகம் செய்தாலும், அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கவில்லை. ஆனால் பாஜக உச்ச நீதிமன்ற தீர்ப்பினைக் காட்டி கட்டாயமாக்கியது. 

நீட் தேர்வினால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதாவின் உயிர்த் தியாகத்திற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. மக்கள் உணர்வு கிளர்ந்தது.  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசும் நீட் தேர்வுக்கு எதிராகவே இருந்தது. நீட் தேர்வு விலக்கிற்கான சட்டம் இயற்றி அனுப்பியது; ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதனை நிராகரித்தது. கொள்கை அளவிலேயே பாஜக நீட் தேர்வை ஆதரிக்கிறது. ஆனாலும் அ.இ.அ.தி.மு.க அதனுடன் கூட்டணி வைக்கிறது. 

சென்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க நீட் தேர்வு விலக்கைப் பெறுவோம் என்று கூறியது. இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் வெற்றி பெற்றால் கல்வியே மாநில பட்டியலுக்கு முழுமையாக மாற்றப்ப டும் என்று ராகுல் காந்தி கூறினார். தி.மு.க முறையான வகையில் சட்டமியற்றி அனுப்பினால் அதனை ஒன்றிய அரசு நிராகரிக்க இயலாது என நினைத்தது. அதே போல ஒரு வல்லுனர் குழு அமைத்து நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்து, அதன் பரிந்துரைகளின்படி நீட் தேர்வு விலக்கிற்கான சட்டமியற்றி அனுப்பியது. ஆனால் ஆளுனர் அந்த சட்ட த்தை முடக்கி வைத்தார். ஒன்றிய அரசும் முடக்கியது. 

இதில் பெரிய அபத்தம் என்னவென்றால், நீட் தேர்வை ஆதரிக்கும், மாநில அரசின் சட்ட த்தை முடக்கும் பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க ஏன் நீட் தேர்வை நீக்கவில்லை என்று தி.மு.க-வை குற்றம் சாட்டி பிரசாரம் செய்கிறது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டினை சேர்ந்த நாற்பது உறுப்பினர்களும் தி.மு.க கூட்டணியினர்தானே என்று வயிற்றெரிச்சல்படுகிறது. 

நாடாளுமன்றத்தை பாஜக அரசு மக்களாட்சியின் விழுமியங்களின் கல்லறையாக மாற்றிவிட்டதை செய்தித்தாள் படிக்கும் யாரும் புரிந்துகொள்வார்கள். வெறும் பெரும்பான்மை அடிப்படையில் எந்த விவாதமும் இன்றி சட்டங்களை இயற்றுகிறது பாஜக. எதிர்கட்சிகள் எந்த பிரச்சினையையும் எழுப்ப அனுமதிக்காமல் பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் முடங்குகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் நாற்பது உறுப்பினர்கள் மட்டும் சட்ட த்தை மாற்ற முடியாது என்பதை பள்ளிச் சிறுவர்கள்கூட புரிந்துகொள்வார்கள். 

தமிழ்நாட்டிற்குக் காட்டப்படும் பல்வேறு பாரபட்சங்களின், இழைக்கப்படும் அநீதிகளின் ஒரு குறியீட்டு அடையாளம்தான் நீட் தேர்வு விலக்கு மறுப்பு. ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகார போக்கை எதிர்க்கத்தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கம் அவசியமாகிறது. 

76th Anniversary of DMK Mupperum Vizha in Karur

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்! 

ஒன்றிய அரசு எத்தனை இடையூறுகளைச் செய்தாலும், நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை செய்தாலும், பொருளாதார வளர்ச்சியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய மாநிலங்களிடையே முதலிடத்தில் நிறுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. 

ஒன்றிய அரசு எப்படியாவது தமிழ்நாட்டு அரசின் சுயாட்சியை பறிக்க நினைக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தைத் திணிக்க நினைக்கிறது. எத்தனையோ மொழிப்போர் ஈகையிரின் தியாகத்தால் தமிழ்நாடு நிறுவிய கொள்கைதான் இருமொழிக் கல்வி என்பதாகும். அதனை எப்படியாவது சீர்குலைத்து, மும்மொழிக் கொள்கை என்ற ஒட்டகத்தை கூடாரத்தினுள் நுழைத்துவிட வேண்டும் எனத் துடிக்கிறது பாஜக அரசு. 

இன்றைய தினம் சென்னை ஐ.ஐ.டி-யில் பேசியுள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியை மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் விடுவிக்க முடியாது என்று கூறியுள்ளார். இது அப்பட்டமான ஆதிக்க மனப்போக்கு என்றால் மிகையாகாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி பங்கு வகிக்கும் மாநிலத்தை வேண்டுமென்றே அரசியல் நோக்கங்களுக்காக சீர்குலைக்கப் பார்க்கிறது பாஜக என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது என்ற காரணத்திற்காக மாநிலத்திற்கு கல்விக் கொள்கை வகுக்கவே உரிமை இல்லாமல் போய்விடாது. ஒன்றிய அரசு பாட த்திட்ட த்தை பின்பற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் அவர்கள் எதையும் செய்துகொள்ளலாம். மாநில அரசின் கல்வித்துறையின் பாட த்திட்ட த்தை பின்பற்றும் பள்ளிகளை எதற்காக ஒன்றிய அரசு கட்டாயப்படுத்த வேண்டும்? 

மாநில அரசு தன் அரசியலை பள்ளிக்கல்வியில் புகுத்துவதாக ஒன்றிய அமைச்சர் கூறுவது மிகப்பெரிய நகைச்சுவை. ஒன்றிய பாஜக அரசு இந்திய வரலாற்றையே தன் அரசியலுக்கு ஏற்றபடி மாற்றி எழுதி வருகிறது. என்.சி.இ.ஆர்.டி உருவாக்கிய உயர்தர பாடநூல்களையெல்லாம் கெடுத்து குட்டிச்சுவராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. புராண கற்பனைகளையும், அறிவியலையும் கலந்து ஒன்றிய அமைச்சர்களே பேசி வருகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் வேண்டுமென்றேதான் செய்கிறார்கள். பாசிச அதிகாரக் குவிப்பிற்கு பகுத்தறிவே எதிரி என்பதால்தான் அவர்கள் வேரிலேயே விஷமேற்ற முயல்கிறார்கள். 

இந்திய ஒன்றியத்தை பாஜக-விடமிருந்து மீட்பதும், தமிழ்நாட்டு நலன் காப்பதும் இன்று வேறு வேறானதல்ல. திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதி திராவிட இந்தியர் என்ற மக்கள் தொகுதியினை உருவாக்கினால்தான் இந்திய ஒன்றியத்தின் வரலாற்றுப் பயணம் சிறக்க முடியும். அதற்கு தமிழ்நாடே வழிகாட்ட முடியும் என்பதால்தான் முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு, தலைகுனியா தமிழ்நாடு ஆகிய முழக்கங்களை வழங்கியுள்ளார். எப்படியாவது தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்து பாஜக-வுடன் கைகோர்ப்பவர்களையும், கைக்கூலி விடலைகளையும் வரலாறு மன்னிக்காது. 

கட்டுரையாளர் குறிப்பு:  

76th Anniversary of DMK Mupperum Vizha in Karur Article in Tamil by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share