ஹரித்துவார் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மான்சா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று (ஜூலை 27) திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. படிக்கட்டுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரகாண்ட் அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு உறுதி அளித்துள்ளது.
மேலும் சிரவண மாதத்தில் ஹரித்துவாரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் வரிசையில் செல்ல வேண்டும். முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதல்வர் நடவடிக்கை!
இச்சம்பவம் குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாரிகாமி தனது எக்ஸ் தள பதிவில், “மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து உள்ளூர் நிர்வாகத்துடன் தொடந்து தொடர்பு கொண்டு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.