இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாகக் கொண்டு, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்குமாறு புதிய ‘நிர்வாக உத்தரவு’ ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்த உத்தரவு, 2022 ஆம் ஆண்டு மார்ச் 8ல் வெளியான ‘நிர்வாக உத்தரவு’(Executive Order) 14066-இன் நீட்சியாகும்.
ஏற்கனவே 25 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கூடுதலாக 25 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிதாக விதிக்கப்பட்ட 25% வரி, அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. ஆனால், அந்த தேதிக்கு முன் கப்பலில் ஏற்றப்பட்டு பயணத்தில் இருக்கும் பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது.

மற்ற நாடுகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்கிறார்களா என்பதை கண்காணிக்கவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் தனிப்பட்ட குழு அமைக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. தேவையெனில், அதே மாதிரியான வரிகள் பிற நாடுகளுக்கும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வெளியுறவுத் துறை அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவை அமெரிக்கா டார்கெட் செய்கிறது. இந்தியா 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்பது உட்பட, இந்த விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை என்று மீண்டும் கூறுகிறோம். இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.