கோவையில் எல்&டி சாலையில் செயல்பட்டு வந்த 5 சுங்கச்சாவடிகள் வரும் 1ம் தேதி முதல் மூடப்படும். மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சுங்க சாவடி மட்டும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் கல்வி மற்றும் வேலைக்காக கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் 2 ஆவது பெரிய நகரமாக வளர்ந்து வரும் கோவையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் தேவை என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை 6 வழி சாலையாக மேம்பால வடிவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் நீலாம்பூரில் இருந்து புறநகர் வழியாக மதுக்கரை செல்லும் சாலை 28 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. Bot திட்டத்தின் படி இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் மூலம் தென்னிந்தியாவில் செயல்படுத்தப்பட்ட முதல் திட்டம் இது. 1999ல் இருந்து 2029 வரை 30 ஆண்டுகளுக்கு சுங்க வரி வசூல் செய்யும் உரிமை எல் அண்டு டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 6 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு அந்நிறுவனம் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது. நீலாம்பூரில் இருந்து மதுக்கரை செல்லும் 28 கிலோ மீட்டர் சாலை மட்டும் இரு வழி சாலையாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்து மத்திய அரசு எல் அண்டு டி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் எல் அண்டு டி சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 1 ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டணத்தை வசூலித்து மத்திய அரசின் கணக்கில் சேர்த்து வருகிறது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய அறிவிப்பின் படி கட்டண வசூல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வசூலிக்கப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆறு சுங்கச்சாவடிகளில் 5 சுங்கசாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மதுக்கரை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மட்டும் கட்டண வசூலை , தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண விதிகளின்படி தொடர இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவத்துள்ளார்.