கல்லீரல் பாதிப்பு இருப்பதற்கான 5 பொதுவான அறிகுறிகளை பின்வருமாறு பார்ப்போம். இவை தொடர்ந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் அடைய வைப்பதுதான் கல்லீரலின் முதன்மை பணியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டுதல், செரிமானத்திற்கான பித்தத்தை உற்பத்தி செய்வது, கொழுப்பை ஒழுங்குபடுத்துதல் உள்பட பல பணிகளை மேற்கொள்கிறது. அதே சமயம் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் மது, புகை பழக்கங்கள் காரணமாக கல்லீரல் தொடர்பான நோய்கள் இன்று மிகவும் பொதுவானதாகி வருகின்றன.
ஆரம்பத்தில் தோன்றும் அறிகுறிகளுக்கு மக்கள் பெரும்பாலும் கவனம் கொடுப்பது இல்லை என்பதால், பல கல்லீரல் நோய்கள் தாமதமாகக் கண்டறியப்படுகின்றன. உங்கள் கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை முக்கியமான அறிகுறிகள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். அவற்றில் கவனம் செலுத்தினால் பெரிய பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
வலது தோள்பட்டையில் வலி: உங்கள் வலது தோள்பட்டையில் அடிக்கடி வலி ஏற்படுகிறது என்றால் அது சாதாரணமானது அல்ல. அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக உள்ளது. கல்லீரலுக்கும் தோள்பட்டைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் யோசிக்கலாம். கல்லீரல் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. உங்கள் கழுத்தின் வலது பக்கத்திற்கு ஒரு நரம்பு வழியாக வலியை அனுப்புகிறது. எனவே, அடிக்கடி ஏற்படும் வலியை புறக்கணிக்க வேண்டாம்.
தோல் அரிப்பு: கல்லீரல் செயல்பாடு பலவீனமடையும் போது தோல் அரிப்புகள் ஏற்படலாம். ஏனெனில் கல்லீரல் பிரச்சனை இருக்கும்போது பித்தம் உங்கள் கல்லீரல், ரத்தம் மற்றும் திசுக்களில் மீண்டும் கலந்து, அரிப்பு ஏற்படுகிறது.
இரவு திடீரென விழித்தல்: நீங்கள் தினமும் இரவு 1 மணி முதல் 3 மணி வரை எழுந்தால் உங்கள் கல்லீரலில் ஏதோ பிரச்சனை உள்ளதற்கான அபாயம் உள்ளது. இது ஒரு ரத்த சர்க்கரை பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரவு நேரத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறைந்து அட்ரினலின் அதை உயர்த்தி, உங்களை விழித்தெழச் செய்கிறது.
வயிறு உப்புசம்: கல்லீரல் பாதிப்பு உங்கள் செரிமானத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. கல்லீரம் பிரச்சனை இருந்தால் சாப்பிட்ட பிறகு வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். இது உங்களுக்கு அடிக்கடி நடந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகும் கூட பசி உணர்வு: நீங்கள் வயிறு நிரம்பியிருந்தாலும் கூட, சாப்பிட்ட பிறகு திருப்தி அடையாமல் இருப்பதும் கல்லீரல் பிரச்சனையின் ஒரு அறிகுறி. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை உடைத்து, உங்களை வயிறு நிரம்பியதாக உணர வைக்கும் அளவுக்கு உங்கள் உடல் பித்தத்தை உற்பத்தி செய்யாததால் இது நிகழ்கிறது. ஆகவே, இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரை சென்று சந்தித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
