தென் கொரியாவில் தொடங்கிய ஒரு தீப்பொறி, இன்று உலகம் முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “ஆண்களை நாங்கள் வெறுக்கவில்லை; ஆனால் அவர்களின் அடக்குமுறை எங்களுக்குத் தேவையில்லை,” என்று லட்சக்கணக்கான பெண்கள் ஒரே குரலில் முழங்கும் இந்த இயக்கத்தின் பெயர் – ‘4B இயக்கம்’ (4B Movement).
இது வெறும் இணைய டிரெண்ட் அல்ல; ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராகப் பெண்கள் தொடுத்துள்ள ஒரு அமைதிப் போர்.
அது என்ன ‘4B’?
கொரிய மொழியில் ‘Bi’ (பி) என்றால் ‘இல்லை’ (No) என்று அர்த்தம். நான்கு விஷயங்களுக்கு ‘இல்லை’ சொல்வதே இந்த இயக்கத்தின் அடிப்படை:
பிஹோன் (Bihon): ஆண்களைத் திருமணம் செய்ய மாட்டோம் (No Marriage).
பிச்சுல்சன் (Bichulsan): குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் (No Childbirth).
பியோனே (Biyeonae): ஆண்களுடன் டேட்டிங் செல்ல மாட்டோம் (No Dating).
பிசெக்ஸு (Bisekseu): ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம் (No Sex).
சுருக்கமாகச் சொன்னால், ஆண்களுடனான அனைத்து விதமான உறவுகளையும் முறித்துக்கொண்டு, தங்களுக்கான வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக்கொள்வதுதான் இதன் நோக்கம்.
ஏன் இந்த விபரீத முடிவு?
தென் கொரியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லை மீறிவிட்டன.
ஸ்பைகேம் கலாச்சாரம்: பொதுக்கழிப்பறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் (Spycams) வைப்பது அங்கு ஒரு தொற்றுநோயாகவே மாறியுள்ளது.
அழகியல் அழுத்தம்: பெண்கள் பொம்மைகளைப் போல இருக்க வேண்டும் என்ற சமூகக் கட்டாயம்.
ஊதிய முரண்பாடு: வளர்ந்த நாடுகளில் அதிக ஊதிய இடைவெளி (Gender Pay Gap) உள்ள நாடு தென் கொரியா.
“எங்களைப் பாதுகாக்காத, எங்களை மதி்க்காத ஆண்களுடன் நாங்கள் ஏன் வாழ வேண்டும்?” என்ற கேள்வியே இந்த இயக்கத்தின் ஆணிவேர்.
உலகம் முழுவதும் பரவும் அலை:
முதலில் கொரியாவில் மட்டும் இருந்த இந்த இயக்கம், இப்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா வரை பரவியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் (Abortion Rights) பறிக்கப்பட்ட பிறகு, “எங்கள் உடலின் மீது அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது, ஆண்களுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?” என்று அமெரிக்கப் பெண்களும் இந்த 4B கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர்.
விளைவு என்ன?
இதன் தாக்கம் சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் பிறப்பு விகிதம் (Birth Rate) உலகிலேயே மிகக்குறைந்த அளவான 0.7-க்கும் கீழே சென்றுவிட்டது. இப்படியே சென்றால் அந்த இனமே அழியும் அபாயம் உள்ளது.
“இது ஆண்களைத் தண்டிப்பதற்காக அல்ல; பெண்கள் நிம்மதியாக வாழ்வதற்காக,” என்கிறார்கள் இந்த இயக்கத்தினர். உலகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பற்றதாக உணரும் வரை, இந்த ‘நோ’ சத்தம் இன்னும் சத்தமாகவே கேட்கும்!
