கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று (மார்ச் 10) மதியம் வழங்கப்பட்ட சத்துணவைச் சாப்பிட்ட 44 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக மாணவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
தகவலறிந்து வந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
ஆணையரின் விளக்கம்:
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், “மாணவர்கள் தற்போது நலமாக உள்ளனர். உணவில் பல்லி விழுந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது; விசாரணையில் முடிவில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புனரமைப்புப் பணிகள் மட்டுமே நடந்தன, உணவு அரசு சார்பில்தான் வழங்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில் சிகிச்சைக்குப் பிறகு நேற்று இரவு மாணவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது.
மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், “சாம்பார் டேஸ்ட் எப்படி?” என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு?
பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக மு.க.ஸ்டாலின் அரசு உறுதி செய்திட வேண்டும் .
பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கறையற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!” தெரிவித்துள்ளார்.
