41 ஆண்டுகள்.. இந்தியாவை அதிர்ச்சியில் உறைய வைத்த ‘இந்திரா படுகொலை’!

Published On:

| By Mathi

Indira Gandhi

இந்தியாவின் இரும்புப் பெண்மணி எனப் போற்றப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தனது சொந்தப் பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட அந்தக் கோர சம்பவம் நடந்து இன்றுடன் 41 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய அரசியலையே உலுக்கிய அந்த கருப்பு நாள், 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி, இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு தழும்பாகப் பதிந்தது.

காலை 9:20 மணியளவில், புது தில்லியிலுள்ள சப்தர்ஜங் சாலை இல்லத்தில் இருந்து அயர்லாந்து தொலைக்காட்சிக்காகப் பேட்டியளிக்கச் சென்றுகொண்டிருந்த இந்திரா காந்தியின் பயணம், கணப்பொழுதில் ரத்தத்தில் முடிந்தது. நம்பிக்கைக்குரிய சீக்கியப் பாதுகாவலர்களான பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோர், இந்திரா காந்தி அம்மையாரை துப்பாக்கியால் சுட்டு கொன்று இந்தியாவை அதிர்ச்சியில் உறைய வைத்தனர்.

ADVERTISEMENT

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்: இந்திரா படுகொலையின் பின்னணி

இந்திரா காந்தி படுகொலைக்குக் காரணமான முக்கிய நிகழ்வு ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ ராணுவ நடவடிக்கை ஆகும். 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலில் மறைந்திருந்த சீக்கியப் போராளிகளை வெளியேற்ற இந்திரா காந்தி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையின் விளைவாகப் பொற்கோயில் சேதமடைந்ததுடன், பலர் உயிரிழந்தனர். சீக்கியர்களின் உணர்வுகளை ஆழமாகப் பாதித்த இந்த நிகழ்வே, அவரது பாதுகாவலர்களை இந்த செயலைச் செய்யத் தூண்டியது.

ADVERTISEMENT

இந்திரா படுகொலை செய்யப்பட்ட அந்த நிமிடங்கள்…

1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி அன்று காலை, பீட்டர் உஸ்தீனோவ் என்ற பிரித்தானிய நடிகருக்குப் பேட்டியளிப்பதற்காக தனது இல்லத் தோட்டத்திலிருந்து அக்பர் வீதியிலுள்ள அலுவலகத்திற்கு இந்திரா காந்தி நடந்துகொண்டிருந்தார். வழியில் ஒரு சிறிய வாயிலைக் கடக்கும்போது, பியாந்த் சிங் தனது கைத்துப்பாக்கியால் இந்திரா காந்தியின் அடிவயிற்றில் மூன்று முறை சுட்டார். நிலை குலைந்து கீழே விழுந்த இந்திரா காந்தியை, சத்வந்த் சிங் தனது ஸ்டென் துப்பாக்கியால் சுமார் 30 முறை சுட்டதில், மொத்தம் 16 குண்டுகள் அவரது உடலைத் துளைத்தன.

ADVERTISEMENT

தாக்குதலுக்குப் பிறகு, பியாந்த் சிங், “நான் செய்யவேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்து கொள்ளலாம்” என்று கூறி தனது ஆயுதங்களைக் கீழே எறிந்தார். அடுத்த ஆறு நிமிடங்களுக்குள், இந்திய-திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த வீரர்கள் பியாந்த் சிங்கை சுட்டுக் கொன்றனர். சத்வந்த் சிங் பலத்த காயங்களுடன் சிறைபிடிக்கப்பட்டார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டனவா?

உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்குப் பிறகு சீக்கியப் பாதுகாவலர்களை இந்திரா காந்தியின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையிலிருந்து நீக்குமாறு பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இது தனது மதச்சார்பற்ற பிம்பத்தைப் பாதிக்கும் என்று கருதிய இந்திரா காந்தி, தனது விருப்பமான பாதுகாவலர்களுள் ஒருவரான பியாந்த் சிங் உட்பட தனது சீக்கியப் பாதுகாவலர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டார். இப்படி பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் புறக்கணித்ததே இந்த துயர நிகழ்வுக்குக் காரணமாக அமைந்தது எனப் பலரும் சுட்டிக்காட்டினர்.

இந்திரா படுகொலைக்குப் பிந்தைய சீக்கியர் இனப்படுகொலை

இந்திரா காந்தி சுடப்பட்டு 10 மணி நேரத்திற்குப் பிறகே, தூர்தர்ஷன் மாலைச் செய்தியில் அவரது மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி வெளியானதும், நாடு முழுவதும், குறிப்பாக டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகள் வெடித்தன. நான்கு நாட்கள் நீடித்த இந்தக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000 முதல் 16,000 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்திரா காந்தியின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். படுகொலைக்குக் காரணமான சத்வந்த் சிங்கும், குற்றவாளியான கெகர் சிங்கும் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இந்திரா காந்தி படுகொலையுண்டபோது அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த சேலையும் அவரது பொருட்களும் புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில், இந்திய வரலாற்றின் ஒரு சோக அத்தியாயத்தின் சாட்சிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்திரா காந்தியின் படுகொலை, இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியதுடன், மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும், அந்த துயர நிகழ்வின் நினைவுகள் இந்திய மக்களின் மனதில் நீங்காமல் இருக்கின்றன.

இந்திராவின் பிறப்பும் போராட்டக் களமும்

1917 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேருவுக்கு மகளாக அலகாபாத்தில் பிறந்தார் இந்திரா பிரியதர்ஷினி. இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தின் அனல் பறக்கும் சூழலில் வளர்ந்தவர். சிறு வயதிலேயே “வானர சேனா” போன்ற அமைப்புகளை உருவாக்கி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 13 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். அதே ஆண்டு மார்ச் 26 அன்று பெரோஸ் காந்தியை மணந்து, ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி என இரு மகன்களைப் பெற்றெடுத்தார்.

அரசியல் பிரவேசமும் விஸ்வரூப வளர்ச்சியும்

1955-இல் காங்கிரஸ் செயற்குழு கமிட்டி உறுப்பினராகி, படிப்படியாக அரசியலில் கால் பதித்தார். 1959-60 காலகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1964 இல் தந்தை ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, மாநிலங்களவை உறுப்பினராகி, லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். சாஸ்திரியின் திடீர் மறைவுக்குப் பிறகு, 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி, இந்தியாவின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்று சரித்திரம் படைத்தார் இந்திரா காந்தி.

இந்திராவின் ஆட்சி

பிரதமர் பதவியில் இந்திரா காந்தியின் முதல் சகாப்தம் (1966-1977) பல புரட்சிகரமான மாற்றங்களைக் கண்டது. 1969 இல் வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர்களுக்கான மானியங்களை ரத்து செய்தது, நிலச் சீர்திருத்தங்கள், பசுமைப் புரட்சி மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது போன்ற அவரது முடிவுகள் இந்திய சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

1971 இல் பாகிஸ்தானுடன் போர் தொடுத்து, வங்கதேச விடுதலைக்கு உதவியது அவரது வெளியுறவுக் கொள்கையின் உச்சம்.

1974 இல் பொக்ரான் அணு ஆயுத சோதனை மூலம் இந்தியாவை அணுசக்தி வல்லரசாக உலகிற்கு பிரகடனம் செய்தார்.

இருப்பினும், அவரது ஆட்சியின் முக்கியமானதும் சர்ச்சைக்குரியதுமான நிகழ்வு 1975 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை. இந்த 21 மாத கால அவசரநிலை இந்திரா ஆட்சியின் கொடூரத்தின் வரலாற்று சாட்சியம்.

1977 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்து பிரதமர் பதவியை இழந்தார்.

ஆனாலும், இந்திராவின் அரசியல் வீச்சு அத்துடன் முடிவடையவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1980 ஜனவரி 14 அன்று மீண்டும் மகத்தான வெற்றியுடன் பிரதமராகப் பதவியேற்று, தனது அரசியல் ஆளுமையை நிரூபித்தார். அவரது இரண்டாவது பிரதம மந்திரி காலம், பஞ்சாப் பிரிவினைவாதப் பிரச்சனைகளால் நிறைந்திருந்தது. பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கிய பிரிவினைவாதிகளை வெளியேற்ற 1984 ஜூன் மாதம் “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்” நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை சீக்கியர்களிடையே பெரும் கோபத்தையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தியது.

இந்த அதிருப்தியின் உச்சமாக, 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share