கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.விடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த துயரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த விசாரணைகளின் போது, கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மயக்க மருந்து அடித்து தாக்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது; இதனால் 41 பேர் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தனர். விஜய்யும் நேற்று முன்தினம் நடைபெற்ற சிபிஐ விசாரணையில் கூறியிருந்தார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜியை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது சிபிஐ. இதனடிப்படையில் டெல்லியில் இன்று மார்ச் 17-ந் தேதி காலை 10 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர்.
