தங்க நகை ஏற்றுமதி கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கோவை பகுதியில் மட்டும் சுமார் 40,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, கோவை போன்ற பகுதிகளிலிருந்து அமெரிக்காவிற்கு அதிக அளவில் தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதித்துள்ளதால், தங்க நகை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 19.9 பில்லியன் டாலர் மதிப்பில் தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தங்கத்தின் விலை ஒரு கிராம் 9,405 ரூபாயாக உள்ள நிலையில், வரிச்சுமை காரணமாக மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் மட்டும் 2,500 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என நகை உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கோவை தங்க நகை தயாரிப்பாளர் மற்றும் கைவினைஞர்கள் சங்கத் தலைவர் ரகு நமது மின்னம்பலம்.காம்-மிடம் கூறுகையில், “அமெரிக்காவின் தங்க நகை இறக்குமதியில் 28 சதவிகிதம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2024-ம் நிதியாண்டில் தங்க நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள் அடிப்படையில் 39 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அமெரிக்காவில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால், பல ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே உள்ளூர் வணிகம் குறைவாக இருப்பதால், கடந்த இரு ஆண்டுகளாக இத்தொழில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், திறமையான பொற்கொல்லர்கள் தினக்கூலி வேலைகள், செக்யூரிட்டி போன்ற வேறு தொழில்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால், அடுத்த சில மாதங்களில் கோவையில் 40,000 நகைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதனால், மத்திய அரசு அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரியைக் குறைக்க நடவடிக்கை எடுத்து, தங்க நகைத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்” என ரகு வலியுறுத்தியுள்ளார்.