காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை 29 ஆம் தொடங்கிய காமன்வெல்த் தொடர் நேற்றோடு (ஆகஸ்ட் 8 ) நிறைவடைந்தது. இந்த தொடரில் நடைபெறும் 280 போட்டிகளில் சுமார் 72 நாடுகளை சேர்ந்த 5054 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் 106 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர், 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர்.
இந்த காமன்வெல்த் தொடரில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்து நிறைவு செய்தது.
இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். முதலில் நடைபெற்ற குழு போட்டியில் இந்தியாவின் சரத் கமல், ஜி சத்யன், தேசாய், ஞான சேகரன், அடங்கிய ஆடவர் அணி நைஜீரியாவை 3-0 என்ற கணக்கில் வென்று தங்க பதக்கத்தை கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் சத்யன் உடன் இணைந்து வெள்ளியும்,

கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா-வுடன் இணைந்து மற்றொரு தங்கமும் வென்றார்.

இதை தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

3 தங்கம் ஒரு வெள்ளியென 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்த சரத் கமலுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறையினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.