3-ம் கட்ட பேச்சுவார்த்தை- திமுக சொன்னதும் சிபிஎம் முடிவும்.. பெ.சண்முகம் விளக்கம்- முழுமையாக!

Published On:

| By Mathi

CPM Shanmugam

திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான அக்கட்சி குழு இன்று மார்ச் 17-ந் தேதி 3-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 இடங்களில் மட்டும் சிபிஎம் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

2026 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் கட்சி கடந்த முறை போட்டியிட்ட 6 இடங்களை விட கூடுதலான இடங்களைக் கேட்கிறது. திமுக பேச்சுவார்தை குழுவோ, கூட்டணியில் புதியதாக 9 கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அனைத்து கட்சிகளும் கடந்த முறை போட்டியிட்ட இடங்களைவிட இம்முறை குறைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறது. இதனை சிபிஎம் ஏற்க மறுத்து வருகிறது.

இதனால் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ADVERTISEMENT

இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த பேரவைத் தேர்தலின் போது போட்டியிட்ட எண்ணிக்கையை விட, கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்கிற எங்களுடைய கோரிக்கையை நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம். நிறைய கட்சிகள் இருக்கிற காரணத்தினால் இந்தப் பேச்சுவார்த்தை என்பது இன்னும் உடனடியாக முடிவுக்கு வர்றதுல சிரமங்கள் உள்ளன. ஏனெனில் ஒவ்வொரு கட்சியையும் தனித்தனியாகப் பேசி அவங்க முடிக்க வேண்டிய ஒரு கட்டாயம் என்பது அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்களுடைய கூடுதல் தொகுதி வேண்டும் என்கிற கோரிக்கை சம்பந்தமாக மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கலந்து பேசி இரவு எங்களிடம் தெரிவிப்பதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே மீண்டும் பேச்சுவார்த்தை என்பது தொடர்ந்து நடைபெறும். ஒரு சுமூகமான முறையில் இந்தத் தொகுதி உடன்பாட்டை எட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் எங்கள் தரப்பிலிருந்து நாங்களும் மேற்கொள்கிறோம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தரப்பிலிருந்து அவர்களும் மேற்கொள்கிறார்கள். அது அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் இது நிறைவு பெறும் என்கிற நம்பிக்கை என்பது எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளும் பெ. சண்முகம் பதில்களும்:

ADVERTISEMENT

கேள்வி: நாட்கள் குறைவாக இருக்கிறது, எப்போது பேச்சுவார்த்தையை முடிக்கப் போகிறார்கள்?

பதில்: இல்ல இல்ல, இது போதுமான நாட்கள் தான். தமிழ்நாட்டுக்கு போதுமான அவகாசம் என்பது இருக்கிறது. அநேகமாக அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தொகுதி உடன்பாடு சம்பந்தமான அனைத்துமே நிறைவு பெறும் என்று நாங்கள் கருதுகிறோம்.

கேள்வி: புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்திருப்பதால், கடந்த முறை பெற்ற தொகுதியிலிருந்து குறைத்துப் பெற்றுக்கொள்ளுமாறு சில கட்சிகளிடம் சொல்லியிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்படி ஏதாவது சொல்லியிருக்கிறார்களா? ஏதாவது ஒரு நம்பர் சொல்லியிருக்காங்களா?

பெ.சண்முகம்: அந்த மாதிரியான வேண்டுகோளை அவர்கள் (திமுக) வைத்திருக்கிறார்கள். நாங்கள் அதை ஏற்க முடியாது. கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும். அதற்குரிய முறையில் இந்த எண்ணிக்கை என்பது உயர்த்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

கேள்வி: 2-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் இதே நிலைதான் இருந்தது, 3-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லையே?

பெ.சண்முகம்: நிறைய கட்சிகள் இருக்கிற போது இந்த மாதிரியான ஒரு நிலைமை என்பது தவிர்க்க முடியாது, அதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆனால் சிபிஎம் கட்சிக்கான கூடுதல் தொகுதியைப் பெறுவதற்கான முயற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம், மேற்கொண்டு இருக்கிறோம்.

கேள்வி: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுக கூட்டணி கட்சிகள் தகராறு செய்யக்கூடாது, எங்களுடைய வேதனையை அவங்க புரிஞ்சுக்கணும், கட்சிகளுக்கு உரிமை இருக்கு.. கூடுதல் தொகுதிகளை முதல்வரிடம் கேட்கட்டும்” என சொல்லி இருக்கிறாரே?

பெ.சண்முகம்: அவங்களோட எங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு? அனைவருக்கும் நான் வந்து சொல்ல விரும்புறது, ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக கூட்டணிக்கான தலைமை தாங்குகிற கட்சி என்கிற முறையில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அவரவர் கட்சியினுடைய பலத்திற்கு ஏற்ப அவர்கள் தொகுதிகளைப் பெறுவது அந்த கட்சியினுடைய உரிமை. ஆகவே காங்கிரஸ் மீது குறைபடுவதோ அல்லது மற்ற பல கட்சிகள் கூடுதலாகப் பெறுகிறார்கள் என்பதிலோ எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பலத்திற்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்துறோம். அதைப் பெறுவதற்கான முயற்சி என்பது தொடருகிறது.

கேள்வி: இந்த ‘டெட்லாக்’ – இழுபறி மாதிரி ஒன்னு ரொம்ப நாளா போயிட்டே இருக்கு?

பெ.சண்முகம்: “டெட்லாக்”.. இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுது. ஒருவேளை இன்னைக்கு இரவே கூட திரும்ப நடக்கலாம் அல்லது நாளைக்கு காலையில நடைபெறலாம்.

கேள்வி: ஒவ்வொரு முறையும் நீங்களும் வர்றீங்க, அவங்களும் பேசிட்டு வரோம்னு தான் சொல்றாங்க?

பெ. சண்முகம்: நான் தான் சொல்லிட்டேனே, கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான எண்ணிக்கை என்பது எங்களுடைய கோரிக்கை. அதை அவர்களுடைய தலைவர்களிடத்திலே கேட்டு சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். தெளிவா தான சொல்றேன், அதுல நான் மழுப்பலாவே சொல்லலையே.

கேள்வி: கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியா இருக்கா?

பெ.சண்முகம்: ஆமா. அப்படியா உறுதியா இருக்குறதுனால தான பேச்சுவார்த்தை தொடர்ந்துட்டு இருக்கு.

கேள்வி: திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோட அடுத்த முடிவு என்ன?

பெ.சண்முகம்: அது அப்ப முடிவு வரும்போது பாத்துக்குறோம். அப்ப எங்களுடைய மாநிலக் குழு கூடி உரிய முடிவெடுக்கும். நாங்க ஒன்னும் தேர்தலைப் புறக்கணிக்கிற கட்சி இல்லையே. இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share