ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் எடுக்காமல் வந்த 300 உ.பி. பக்தர்கள்- ஜெய்ஹோ முழக்கம் போட்டு ’கிரேட் எஸ்கேப்’!

Published On:

| By Mathi

Rameswaram Train

ராமேஸ்வரத்துக்கு மதுரையில் இருந்து ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 300க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வட மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்த ரயிலில் 300க்கும் மேற்பட்ட உத்தரப்பிரதேச மாநில பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் 400-க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் ராமேஸ்வரம் ரயிலில் மூட்டை முடிச்சுகளுடன் ஏறினர். இவர்களில் சிலர் மட்டுமே டிக்கெட் எடுத்திருந்தனர். அத்துடன் சக பயணிகளின் இருக்கைகளையும் உ.பி. பக்தர்கள் ஆக்கிரமித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டதால் மதுரையில் இருந்தே உ.பி. பக்தர்களின் ரயில் டிக்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் ரயிலில் டிக்கெட் எடுக்காமலேயே ராமேஸ்வரத்துக்கு பயணம் செய்தனர். இவர்களிடம் ரூ24,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

ஆனால் இந்த சோதனை முடிவடைவதற்குள் ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உ.பி. பக்தர்களை ரயில்வே அதிகாரிகள் தடுத்து விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஜெய்ஹோ உள்ளிட்ட முழக்கங்களை கூட்டமாக எழுப்பியபடி ரயில்வே அதிகாரிகளிடம் இருந்து உ.பி. பக்தர்கள் தப்பி ஓடினர். இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share