கோவையில் தனது பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி. கடந்த 2023 ம் ஆண்டு சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிந்த நிலையில் , இது தொடர்பான வழக்கு நடைபெற்று 50 லட்ச ரூபாய் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு சட்ட உதவி செய்த அதே பகுதியை சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் 10 லட்ச ரூபாய் வழக்கு செலவிற்காக வாங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாஜகவை சேர்ந்த இந்த 3 பேரும் மேலும் ஒரு 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகவும், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை பயன்படுத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நாகராஜ் நாகமணி தம்பதியின் இளைய மகன் அருணாச்சலம் நேற்று வீடியோ ஒன்றை சமூகவலை தளங்களில் பகிர்ந்தார்.
அதில் பா.ஜ.கவை சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி முதலில் 10 லட்சம் ரூபாய் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர். தற்போது மீண்டும் , தேர்தல் வருகின்றது , செலவுக்கு பணம் வேண்டும் என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை பயன்படுத்தி மிரட்டுவதாகவும் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.இந்நிலையில் நாகராஜ் கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றையும் அழைத்துள்ளார்.
இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் தனது பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது உதவியாளர் மூலம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் குறிப்பிட்ட நிகழ்வுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல் துறை உதவிட வேண்டும் எனவும் அதே சமயம், எனது பெயரை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.