மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. டார்ஜிலிங் மற்றும் கூக் பெஹர் பகுதிவரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. டார்ஜிலிங் மாவட்டத்தையும், வடக்கு சிக்கிமை இணைக்கும் சாலைகளும், சிலிகுரி – மிரிக் டார்ஜிலிங்கை இணைக்கும் இரும்புப் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்வு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டார்ஜிலிங்கில், சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 24 மணி நேரத்தில் 261 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது மிக அதிதீவிர கனமழையாக பதிவாகியிருக்கிறது. கூக் பெஹரில் 192 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரை காணவில்லை.
இந்நிலையில் டார்ஜ்லிங் மற்றும் கலிம்போங்கில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.