கோவை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டரை மாதங்களில் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.
உலகளவில் உயிரிழப்பு ஏற்படுத்தும் தொற்று நோய்களில் ரேபிஸ் 10 ஆவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 59,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படுகின்றன, இவற்றில் பெரும்பாலானவை ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நிகழ்கின்றன. இந்தியாவில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 36 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 95-97% நாய் கடியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் மட்டும் 3,67,604 போ் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 20 போ் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள தெரு நாய்களிடையே இந்த வைரஸ் நோய் பரவியிருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையில் தெரு நாய்களின் எண்ணிக்கை 1.11 லட்சமாக மதிப்பிடப்பட்டது. 2025 ஜூன் மாதம், மாநகராட்சி மிஷன் ரேபிஸ் மற்றும் ஹ்யூமேன் அனிமல் சொசைட்டி ஆகிய தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து ரேபிஸைத் தடுக்கவும், தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்புகள் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன.
மேலும், ஆரோக்கியமற்ற அல்லது ரேபிஸ் தொற்று சந்தேகிக்கப்படும் நாய்களைப் பற்றி புகாரளிக்க மாநகராட்சி ஒரு கண்காணிப்பு உதவி எண்ணை (98437 89491) அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் ஜூன் முதல் இந்த எண்ணுக்கு 326 புகார்கள் வந்தது.
இந்நிலையில் ஜூன் மாதம் முதல் 14 ஹாட் ஸ்பாட்கள் அடையாளம் கண்டு, 49 நாய்கள் பிடிக்கப்பட்டன. இவற்றில் நான்கு நாய்கள் தடுப்பூசி போடப்பட்டு விடுவிக்கப்பட்டன. ஆனால், மீதமுள்ள 45 நாய்கள் சீராநாய்க்கன்பாளையம் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் 4 முதல் 10 நாட்களுக்குள் இறந்தன. உயிரிழந்த 45 நாய்களின் மூளை திசுக்களை சேகரித்து பரிசோதித்ததில், 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து இலவச ரேபிஸ் தடுப்பூசி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
பொதுவாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் செல்லும் போதே நாய்கள் துரத்தி வரும் நிலையில் தற்போது 25 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.