வைஃபை ஆன் செய்ததும், “நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பு” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
ஓஹோ.. யாரோ யாரிடமோ ஏமாந்துட்டாங்களா? ஏமாறப் போறாங்களா?
அதுக்கான விளக்கத்தை கடைசியாக சொல்றேன்.. முதல்ல அன்புமணியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தினதை பற்றி சொல்றேன்..
சரி சொல்லுங்கோ..
டாக்டர் ராமதாஸ், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தப்ப திமுக, அதிமுக, பாஜகன்னு எல்லா கட்சித் தலைவர்களும் போய் பார்த்தாங்க..
பாஜக, அதிமுக தரப்பை பொறுத்தவரைக்கும், ஒருங்கிணைந்த பாமகதான் கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் என நினைக்கிறது.. அதனாலேயே அப்பா ராமதாஸ்- மகன் அன்புமணி பிரச்சனை முடியட்டும் என பொறுத்திருந்தாங்க..
அதேநேரத்துல பாமகவில் யாருக்கு செல்வாக்கு? என தெரிந்து கொள்ள அமித்ஷா தரப்பில் ஒரு சர்வே எடுத்திருக்காங்க..
அத்துடன், டாக்டர் ராமதாஸ் பேட்டி தருவது, அறிக்கை விடுவது எல்லாம் அவர் திமுக கூட்டணியை நோக்கி நகருகிறார் என பாஜகவை நினைக்கவும் வைத்திருக்கிறது..
இந்த பின்னணியில்தான் சென்னையை அடுத்த அக்கரையில் இருக்கும் அன்புமணி பங்களாவில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா நேற்று (அக்டோபர் 16) அன்புமணியை சந்தித்து பேசுனாரு..
இந்த சந்திப்பின் போது, “NDA கூட்டணியில்தான் பாமக இப்பவும் இருக்கிறது.. இதே கூட்டணியிலேயே இருப்போம்” என அன்புமணி சொல்லி இருக்கிறார்.
இதை ஆமோதித்தபடியே பேசிய பைஜெய்ந்த் பாண்டா, “எங்களுக்கு ஒரு ரிப்போர்ட் வந்திருக்கு.. பாமகவில் இளைஞர்கள் உங்க பக்கமும் சீனியர்கள் உங்க அப்பா பக்கமும் இருக்கிறாங்கன்னு அதில் சொல்லப்பட்டிருக்கு” என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
ஓஹோ.. இதுக்கு அன்புமணியோட ரியாக்சன் என்னவாம்?
பைஜெய்ந்த் பாண்டாவின் இந்த கேள்வியை ரொம்பவே எதிர்பார்த்தமாதிரியே அன்புமணி தடதடவென சில புள்ளி விவரங்களை சொல்லி மலைக்க வைத்திருக்கிறார்.
அன்புமணிக்கு நெருக்கமான சிலர் நம்மிடம் பேசுகையில், “பாஜக பாண்டாவிடம் பாமகவில் 95% பேர் ஓட்டு எங்ககிட்டதான் இருக்கு.. அய்யா கிட்ட (ராமதாஸ்) 1% அல்லது 2% ஓட்டுதான் இருக்கும்.. எங்க ஆட்களில் 2% யாருக்குமே ஓட்டுப் போடாதவங்க.. இப்படித்தான் நாங்க எடுத்திருக்கிற சர்வே சொல்லுது” என சில பேப்பர்களை காட்டினார் சின்னய்யா.
அதே மாதிரி “ஐயாகிட்ட இருக்கும் ஜிகே மணி, அருள்.. இந்த ரெண்டு எம்.எல்.ஏக்கள்தான் அவரை குழப்பிகிட்டு இருக்காங்க.. மற்றபடி கட்சியோட எல்லா மாவட்டங்களுமே எங்ககிட்டதான் இருக்கு.. ” எனவும் சில நிகழ்வுகளை சொல்லி விளக்கம் தந்தார் சின்னய்யா” என்றனர்.
இதற்கு அடுத்ததாக எத்தனை சீட் என்கிற பேச்சுக்கு நகர்ந்திருக்கிறது.
அப்போது அன்புமணி, “பாமகவுக்கு 25 தொகுதிகள் கண்டிப்பாக ஒதுக்கனும்.. 1 ராஜ்யசபா சீட்டும் கண்டிப்பாக வேண்டும்.. அடுத்த மார்ச் மாதம் ராஜ்யசபா தேர்தல், தமிழகத்துல நடக்குது.. அதுல 1 சீட் எனக்கு கொடுக்கனும்” என கறார் தொனியில் பேசினாராம் அன்புமணி.
இத்தனையையும் பொறுமையாக கேட்டுகிட்ட பைஜெய்ந்த் பாண்டா, “தொகுதிகள் பற்றி மேலிடத்துல பேசுறேன்.. ராஜ்யசபா சீட்டுங்கிறது அதிமுகதான் முடிவு செய்யனும்.. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்” என கூலாக சொல்லி இருக்கிறார்.
இதற்கு அப்புறமா, நடிகர் விஜய் குறித்து அன்புமணியும் பைஜெயந்த் பாண்டாவும் பேசியிருக்கின்றனர்.
பைஜெய்ந்த் பாண்டாவிடம், “விஜய் நம்ம கூட்டணிக்கு வருகிறாரா” என அன்புமணி கேட்க, “விஜய் சைடுல இருந்து கூட்டணிக்கு வருவது பற்றி எந்த தகவலும் நமக்கு வரலை” என சொல்லி இருக்கிறார்.
உடனே அன்புமணி, “விஜய் நம்ம கூட்டணிக்கு வருவதால அப்படி ஒன்னும் பலமும் இல்லைதான்னுதான் ரிப்போர்ட்டுகள் சொல்லுது” என சுட்டிக்காட்டினாராம்.
இதன் பின்னரும் இருவருமே, “விஜய் கூட்டணிக்கு வந்தால் அவரும் நிறைய தொகுதிகள் கேட்பாரு.. அதிமுகவோ அதிக இடங்களில் போட்டியிடனும் நினைக்குது.. இது எப்படி சரியா வரும்?” என பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிகிட்டாங்களாம்.
ஓ..இவ்வளவு நடந்துருக்கா?
(ராமதாஸ் சந்திப்பு செய்தியை இங்கே வைக்கலாம்)
ஆமா.. அதிமுக கூட்டணிக்கு விஜய் போறாரா? இல்லையா?
இந்த கேள்வியை நீர் மட்டுமல்ல.. சட்டப்பேரவையில் டீ குடிக்கிற எம்.எல்.ஏக்களும் கூட கேட்டு விவாதிக்கிறாங்க..
ஓஹோ.. சட்டப்பேரவை கேண்டீனுக்கு போயிட்டீரா?
சட்டப்பேரவை வளாகத்தில் டீ குடிக்க போகும் திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களின் ஹாட் டாபிக்கே விஜய் யாருடன் கூட்டணி வைப்பார்? என்பதுதான்.
சில திமுக எம்.எல்.ஏக்கள் ரொம்பவே கவலையா அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம், “விஜய் உங்க கூட்டணிக்கு வர்றாராமே” என கேட்டு பதிலை வாங்குகின்றனர்.
அப்படி பதில் சொல்லும் அதிமுக எம்.எல்.ஏக்கள், “விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வரனும்னு பாஜகதான் ரொம்பவே முயற்சிக்குது.. விஜய் தரப்புல இருந்தும் கூட எங்க பொதுச்செயலாளரிடம் சிலர் பேசத்தான் செய்றாங்க..
ஆனா பொதுச்செயலாளருக்கு (எடப்பாடிக்கு) அப்படி எல்லாம் பெரிய ஆர்வம் இல்லைதான் தெரியுது..
அதிமுக- பாஜக-பாமக-தேமுதிகன்னு 2021-ல் இருந்த கூட்டணியேதான் இந்த முறையும் இருக்கும்.. நிச்சயம் இந்த தேர்தலில் ஜெயிச்சுருவோம்” என்கின்றனராம்..
இவ்வளவு சொன்னீரே.. அந்த ‘நம்பினோர் கெடுவதில்லை’ மேட்டர் என்னப்பா?
அதை தெரிஞ்சுக்கலைன்னா தலையில இடி விழும்போல..
அதிமுகவுடன் கூட்டணி வெச்சது முதலே.. முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பாஜகவில் அமித்ஷா தொடங்கி அண்ணாமலை வரை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை சொல்லிகிட்டே இருக்காங்க..
முதல்வர் வேட்பாளர் நானே.. என எடப்பாடியே பிரகடனம் செஞ்சுகிட்டாரு.. அண்ணாமலையும் கூட திடீர்னு எடப்பாடியை முதல்வராக்குவோம்னு சொன்னாரு..
எடப்பாடிதான் சிஎம் வேட்பாளரா? அப்ப நான் கூட்டணியைவிட்டே விலகுறேன்னு டிடிவி தினகரன் வெளியே போயிட்டாரு..
இதுவரைக்கும் பாஜக, எடப்பாடிதான் சிஎம் வேட்பாளர் என பகிரங்கமாக சொல்லலை.. ஆனா தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும்ன்னு சொல்லி குழப்பிவிட்டுகிட்டே இருக்கு..
ஆமாய்யா இது எல்லாம் தெரிஞ்ச கதைதானே..
ப்ளாஷ்பேக்கா இருந்தாலும் ஏன் சொல்றேன்னா.. இப்ப பீகாரில் தேர்தல் நடக்குதே.. அங்கே அமித்ஷா சொல்லி இருக்கிற மேட்டர்தான் அதிமுகவை ரொம்பவே ‘ஹீட்டாக்கிவிட்டிருச்சு’..
அப்படி என்னப்பா அமித்ஷா சொன்னாரு?
ஆஜ்தக் டிவி சேனலுக்கு பேட்டி தந்த அமித்ஷா, “பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது; பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூடி அந்த கட்சிகளின் சட்டசபை தலைவர்களை தேர்வு செய்வாங்க.. அந்த புதிய எம்.எல்.ஏக்கள் முடிவின்படிதான் யார் அடுத்த முதல்வர்னு தெரிய வரும்” ன்னு சுத்தி வளைச்சு சொல்ல, முதல்வர் பதவி கனவில் இருக்கும் நிதிஷ்குமாரும் அவரோட ஜேடியூவும் ரொம்பவே அப்செட் ஆகிட்டாங்க..
அமித்ஷாவின் இந்த பேட்டிதான், இப்ப அதிமுகவையும் ‘அலைபாய’விட்டிருக்கு.. எடப்பாடியிடம் இந்த பேட்டி பற்றி சில சீனியர் பத்திரிகையாளர்கள் சொல்ல, அவரோ செம்ம அப்செட் ஆகிட்டாராம்.. நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்குமறை தீர்ப்புதான்.. அரசியலுக்குதான் அது பொருந்தாதேன்னு சொல்ல வந்தேன் என டைப் செய்தபடியே சென்ட்பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.