2026 தேர்தலில் TVK vs DMK இடையேதான் போட்டி.. ஸ்டாலின் மீது கடும் தாக்கு- தவெக பொதுக்குழுவில் விஜய் அதிரடி பேச்சு!

Published On:

| By Mathi

TVK Vijay Speech

“2026 தேர்தலில் தவெக- திமுக இடையேதான் போட்டி.. வெற்றி பெறுவோம்.. வாகை சூடுவோம்” என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் இன்று (நவம்பர் 5) நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுவில் நடிகர் விஜய் பேசியதாவது:என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும், வணக்கம்.

ADVERTISEMENT

நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால், சொல்லொணா வேதனையிலும் வலியிலும் இவ்வளவுநாளாக இருந்தோம். அத்தகைய சூழலில், நம் சொந்தங்களின் மனம்பற்றி இருக்க வேண்டியது நம் கடமை. அதனால்தான் அவர்களுடன் சேர்ந்து அமைதி காத்து நின்றோம்.

அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள்

ADVERTISEMENT

இதற்கிடையில் வன்ம அரசியல் வலைகள் நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். அர்த்தமற்ற அவதூறுகளும் பரப்பப்பட்டன. இதையெல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு துடைத்து எறியத்தான் போகிறோம். பட் அதுக்கு முன்னாடி, தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஓர் உரைக்கு ஒரு நாகரிக பதிலடி நாம் கொடுக்கனும்னு நினைக்கிறேன்.

முதல்வரின் சட்டமன்ற பேச்சுக்கு பதில்

ADVERTISEMENT

அரசியல் செய்ய விரும்பவில்லை என்று அடிக்கடி கூறும் தமிழக முதல்வர், 15.10.2025 அன்று சட்டமன்றத்தில் நமக்கெதிராக பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார் என்பதையும் அவர் எப்படிப்பட்ட அரசியலை செய்ய முயல்கிறார் என்பதையும் மக்கள் உணராமலா இருக்கின்றனர்?.

அதீத கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை

கரூருடன் சேர்ந்து 5,6 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். கடைசி நாள்வரை அந்த இடம் தருவாங்களா? இந்த இடம் தருவாங்களா?ன்னு அழைகழிப்பாங்க..

இந்தியாவில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத அளவில், பிரச்சார வாகனத்துக்கு உள்ளேயே இருந்துதான் மக்களைப் பார்க்க வேண்டும் ; வாகனத்துக்கு மேலே வந்து கைகாட்டக் கூடாது என்பன போன்ற அதீதக் கட்டுப்பாடுகளை நமக்கு மட்டுமே விதித்ததை எதிர்த்து நாம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டதோடு, நம் கழகம் சார்பாக அனைத்து கட்சிகளுக்கும் சமமாக, முறையான ஒரு பொது வழிகாட்டு முறைகளுடன் (S.O.P) கூடிய அனுமதியை நமக்கும் வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தையும் நாடியிருந்தோம் இதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பாங்க?

அரசியல் காழ்ப்புடன் நேர்மைத் திறனற்று நம்மைப் பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு ஒரு சில கேள்விகள். உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களை வைத்தும் 13.10.2025 அன்று வெளியிடப்பட்ட உத்தரவை வைத்தும் இந்த கேள்விகள்..

உச்சநீதிமன்றத்தில் திக்கி திணறியது மறந்துவிட்டதா?

பொய்மூட்டைகளை அவதூறுகளாக நம்மீது அவிழ்த்துவிட முதல்வர் அவர்களுக்கு, அவரின் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் சார்பாகக் கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்களே, கபடநாடக தி.மு.க. அரசின் தில்லுமுல்லுகளைத் தாங்கிப் பிடிக்க இயலாமல், உச்ச நீதிமன்றத்தில் திக்கித் திணறி நின்றது முதல்வர் அவர்களுக்கு மறந்துவிட்டதா?.

தவெக மீது அவதூறு சுமத்த அதிகாரிகள் பிரஸ்மீட்

கரூர் சம்பவத்திற்கு அப்புறமாக அவசர அவசரமாக ஒரு தனிநபர் ஆணையம்.. அந்த ஆணையத்தையே அவமதிப்பதுபோல அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை வைத்து, நம் மீதும் அவதூறு பரப்பி செய்தியாளர் சந்திப்பை அவசரமாக நடத்தியது ஏன் என்று தமிழக மக்கள் கேள்வி கேட்டதை முதல்வர் மறந்துட்டாரா? அந்த ஆணையத்தை குட்டி உட்கார வெச்சுட்டாங்க..

முதல்வர் சொன்ன பொய்

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதத்திலும் சட்டமன்றத்தில் பேசுகிறதுபோது, உண்மை நிலையைத் தெளிவுபடுத்தத்தான் என்று ஏதோ சட்ட ரீதியாகவும் சத்தியத்திற்காகவும் நடந்ததுபோல சாமர்த்தியம் பேசுவதாக நினைத்து பேசியிருக்கிறார். 50 ஆண்டுகாலப் பொதுவாழ்வை கொண்ட முதல்வர் சொல்வது எப்படிப்பட்ட வடிகட்டிய பொய், சப்பைக்கட்டுன்னு நான் சொல்லலை.. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்குது… அவங்க சொன்னது எல்லாம் என்னான்னு லைட்டா கொஞ்சம் பார்ப்போமா?

உச்சநீதிமன்றம் சொன்னது என்ன தெரியுமா?

(the comments which have been made before the media by the top officers of the Police Department, may create doubt in the minds of the citizenry on impartiality and fair investigation. The faith and trust of the general public on the process of investigation must be restored in the criminal justice system) அரசு காவல் உயர் அதிகாரிகள் ஊடகங்களிடம் பேசியது என்பது பொதுமக்களிடையே நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நியாயமான விசாரணை மூலமே அந்த சந்தேகத்தை மீட்டெடுத்தே ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கி நறுக்கி நறுக்கி குட்டியதே.. முதல்வர் அவர்கள் மறந்துட்டாரா?

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றி

மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் S.I.T. அமைத்து உத்தரவிட்டார் அல்லவா?. அந்த உத்தரவை, ஏதோ சட்டத்தின் மீதும், நீதி பரிபாலனத்தின் மீதும் மரியாதை கொண்டவர்கள்போல ஒரு நாடகத்தனமானக் கொண்டாட்டத்தை தி.மு.க.வும் தி.மு.க.விற்கு ஒத்து ஊதுவோரும் நடத்திக் கூத்தாடிக் குதூலித்தனர் அல்லவா?. த.வெ,க.விற்கு எதிராகவும் நமக்கு எதிராகவும் உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் தீர்ப்பளித்து விட்டதாக விதந்தோதி விழா எடுத்தனர் அல்லவா?.

SIT விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம்

அந்த உத்தரவு குறித்துச் சொல்லும் போது, “எந்த ஆவணத்தின் அடிப்படையில் அந்த உத்தரவு அமைக்கப்பட்டது”? நான் கேட்கலை.. உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது.. (The judgement is completely silent about how learned Single Judge arrived at such a conclusion and what material was perused by the Court.) என்று உச்ச நீதிமன்றம் உரத்தக் குரலில் கேள்வி கேட்டது.

அப்போதும் கூட, உச்சநீதி மன்றத்தில் தி.மு.க. அரசுக்காக வாதாடிய அறிவார்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பதில் சொல்ல இயலாமல் வாய்மூடி மவுனம் காத்ததை நாடே…. நமட்டுச் சிரிப்புடன் (வாய் மூடி சைகை செய்தார்) பார்த்ததுரிதையும் முதல்வர் அவர்கள் மறந்துட்டாரா?

முதல்வருக்கு அதிகார மயக்கமா?

(such petition ought to be dealt with by the Division Bench, registering as public interest litigation in right earnest, and not to be dealt with by a Single Bench.) பொது வழிகாட்டு முறைகளான S.O.P அமைக்கப்பட்டு வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் வந்த ரிட் மனுவை நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச்தான் கையாள வேண்டும். தனி நீதிபதி பெஞ்ச் கையாளக் கூடாது என்றும் உச்சநீதி மன்றம் சொன்னதல்லவா?. அதுமட்டுமா?. கோரிக்கையே இல்லாமல S.I.T அமைக்கப்பட்டது எந்த வகையில் சரி என்றும் கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். இது எல்லாமே அறியாமலோ அல்லது அறியாததுபோலவோ உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து பேசினாரோ முதல்வர் அவர்கள்?

அரசியல் ஆதாய ஆட்டம்

மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு என எதுவுமே இல்லாமல் அரசியல் ஆதாய ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிட்டார் முதல்வர் அவர்கள். 1969க்குப் பிறகு அவங்க கைக்கு கட்சிக்கு வந்தப்ப, அதிலும் குறிப்பாக 1972க்குப் பிறகான தி.மு.க. இப்படித்தான்

முதல்வருக்கு புரிகிறதா?

இந்த கேள்விகள் எல்லாம் உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது எதைக்காட்டுகிறது என்பது முதல்வருக்குப் புரிகிறதா?. உச்சநீதிமன்றத்திலும் மட்டுமல்ல மக்கள் மன்றத்திலும் இந்த அரசு மீதான நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது என்பதாவது புரிகிறதா முதல்வருக்கு?.

2026-ல் மக்கள் மன்றம் புரிய வைக்கும்

புரியவில்லை எனில், வருகிற 2026 தேர்தல் வாயிலாக தி.மு.க தலைமை ஆழமாக உணரும் வகையில் மக்கள் மன்றம் அவர்களுக்கு அழுத்தமாகப் புரிய வைக்கும். அப்போதும்கூட ‘மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்’ என்று பழக்கதோஷத்தில் அறிக்கை வெளியிடுவாங்க.. அப்படி அறிக்கையை வெளியிட்டு அறிவாலயத்துல போய் ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.. அந்த அறிக்கையை இப்பவே ரெடி செஞ்சு வைச்சுக்குங்க..

நம் அரசியலைத் தடுப்பது யார்?

நான் சென்ற பொதுக்குழுவில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். இயற்கையும் இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவில் மாபெரும் மக்கள் சத்தியாக நமக்கு துணையாக இருக்கும்போது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார்?

அன்புடன் தகர்த்து எறிவோம்

அதனால் தோழர்களே, நமக்கு நேர்ந்துள்ள இந்த இடையூறுகள் டெம்பரிராதான். நாம் மக்களுடன் நிற்போம்..

TVK Vs DMK நேரடிப் போட்டிதான்

இப்பவும் சொல்றேன்.. 2026 சட்டமன்றத் தேர்தலில் ரெண்டே ரென்டு பேருக்கு இடையேதான் போட்டி.. ஒன்று TVK… இன்னொன்று DMK 100% வெற்றி நிச்சயம்.. வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். நல்லதே நடக்கும். இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share