தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் இன்று (மார்ச் 7) மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மகளிரணியினர் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.
அப்போது குட்டி ஸ்டோரி சொல்லி தனது உரையை தொடங்கிய விஜய் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.
பெண்களுக்கு தனி இலாகா
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலனில், அவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே நம் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்று. இதை நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிலேயே அறிவித்தோம். அதன்படி அதற்கெனத் தனித்துறை அதாவது தனி இலாகா ஏற்படுத்தப்படும். அந்த இலாகா எனது நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும். சமரசமற்ற பெண்கள் பாதுகாப்பை நோக்கிப் பயணிக்கும் நம் கனவு நனவாவது உறுதி என்பதை நமது தேர்தல் முதல் வாக்குறுதியாகச் சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
மாதம்தோறும் ரூ.2,500
இந்தியாவில் நம்பர் ஒன்னாக இல்லாத மாநிலங்களில் கூட பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய தொகை அதிகமாக உள்ளது. ஆனால் நம்பர் ஒன் மாநிலம் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வெற்றி விளம்பர மாடல் திமுக ஆட்சியில், மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் வெறும் ₹1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் தொகையால் அவர்களின் மளிகை சாமான் வாங்குவது போன்ற முக்கிய செலவுகளில் ஒன்றாவது குறைந்தபட்சமாக பூர்த்தியாக வேண்டும். அந்த எண்ணத்தின் அடிப்படையில் யோசித்ததால், நாம் அமைக்கப் போகும் மக்கள் அரசில், இனி 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும் என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இதில் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு. இப்படிச் செய்வதால் கூடுதலான குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை நம் தாய்மார்கள் அனைவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வர் என்பது நமக்குத் தெரியும்.
இலவச சிலிண்டர்
அடுத்து, அன்னபூரணி சூப்பர் 6 திட்டம். நம் வீட்டுப் பெண்களுக்குப் பெரும் சுமையாக மாறி நிற்பது சமையல் கேஸ் விலையும் ஒன்று. தேர்தல் நெருங்கும் போது மட்டும் கேஸ் விலை குறைக்கப்படும், தேர்தல் முடிந்ததும் மீண்டும் கேஸ் விலை உயர்த்தப்படும். அந்த விலை உயர்வு நம் காதுகளில் புகை வரும் அளவிற்கும் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கும் இருக்கும். தமிழகம் முழுவதும் இருக்கும் பெண்களின் மனதை அறிந்து நம் எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த அன்னபூரணி சூப்பர் 6 திட்டம். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
ஒரு பவுன் தங்கம்…
அடுத்து, அண்ணன் சீர் திட்டம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருவது அந்தக் குடும்பத்தில் நடக்கும் திருமணக் கொண்டாட்டம்தான். அதை எந்த வருத்தமும் இன்றி முழு மனநிறைவுடன் கொண்டாட வேண்டும். அதற்காகவே நம் தங்கைகளின் திருமணத்திற்காக 8 கிராம் அதாவது ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.
பொருளாதார உதவி ரூ.15,000
காமராஜர் கல்வி உறுதித் திட்டம். கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரை, கொள்கைத் தலைவர்களில் ஒருவராக ஏற்ற ஒரு இயக்கம்தான் நம்ம தமிழக வெற்றிக் கழகம். நமது கல்வி சார்ந்த கனவுகளில் ஒன்றாக கல்வி இடைநிற்றல் என்பது இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள திட்டம்தான் காமராஜர் கல்வி உறுதித் திட்டம். இடைநிற்றலுக்கான காரணங்களில் ஒன்றாகப் பொருளாதாரக் குறைபாடும் இருக்கிறது. இதை உணர்ந்ததால் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையும் கல்வி இடைநிற்றலுக்கு ஆளாகவே கூடாது என்று எண்ணுகிறோம். அந்த எண்ணத்தின்படி நம் விருப்பத்தை நிறைவேற்ற, இடைநிற்றலே இல்லாமல் செய்வதற்காக ஒவ்வொரு தாய்க்கோ அல்லது பாதுகாவலருக்கோ ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.
அனைத்துப் பேருந்துகளிலும் இலவச பயணம்
வெற்றிப் பயணம் திட்டம். கட்டணமில்லாப் பேருந்து பயணம் என்று அறிவித்துவிட்டு அது பிங்க் பஸ்சில் மட்டும்தான் என்று கட்டுப்பாடு விதித்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் உட்பட குறிப்பிட்ட அந்த ஒரு பேருந்துக்காகக் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே அந்த நிலை மாற வேண்டும். மேலும் குடும்பங்களில் ஏற்படும் சூழலால் அவசர மற்றும் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும். அதுமாதிரியான நேரங்களில் கையில் காசில்லை என்றால் அந்தப் பயணத்தைக் கவலையுடன் தவிர்க்க வேண்டிய நிலையும் ஏற்படும். இது போன்ற தர்மசங்கடமான நிலையைத் தவிர்ப்பதற்காக அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும்.”
இதன்மூலம் “எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்து பெண்களும் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம். மேலும் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
பெண்கள் பாதுகாப்பு
அடுத்தது, சீரோ டாலரன்ஸ் ஃபார் க்ரைம்ஸ் அகெய்ன்ஸ்ட் விமன் (Zero Tolerance for Crimes against Women). பெண்களுக்கு எதிரான குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் சீரோ டாலரன்ஸ் ஃபார் க்ரைம்ஸ் அகெய்ன்ஸ்ட் விமன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது நம் மிகப்பெரிய கனவு, நம்முடைய விருப்பம்.
இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை, விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை என இந்தக் கொடுமைகளில் ஈடுபட்டதே திமுக நிர்வாகி ஒருவரும், திமுக கவுன்சிலர் ஒருவரும் தான் என்பது செய்திகள் வழியாக எல்லாரும் அறிந்த ஒன்று. இதையெல்லாம் தடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலுநாச்சியார் படை ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இருக்கிற இந்தப் படையைச் சேர்ந்த பெண்கள் பாடி கேம் (Body Cam) உடன் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்பட்டுப் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலையம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இந்த ஃபாஸ்ட் டிராக் (Fast Track) கோர்ட்டுகளில் பெண்களுக்கு எதிரான கேஸ்கள் எதுவும் இனி நிலுவையில் இல்லாத நிலை ஏற்படும். விசாரணையும் முறையாக நடத்தப்பட்டுத் தீர்ப்பும் விரைவாக வழங்கப்படும். இதுக்கு தான் மகிளா கோர்ட் இருக்குதே அப்படின்னு சில பேர் சொல்ல ஆரம்பிச்சிருவாங்க. ஆனா இது நம்ம பெண்களுக்காக மட்டுமே.
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் பேனிக் பட்டன்ஸ் (Smart Panic Buttons) அறிமுகப்படுத்தப்படும். இந்த பட்டன்கள் 24×7 சென்ட்ரலைஸ்டு கமாண்ட் சென்டர் (Centralised Command Centre) உடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். அந்த பட்டன்கள் தனியார் ஷேர் ஆட்டோக்கள் உட்பட அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பொருத்தப்படும். இந்த பட்டன்கள் வழியாக ஐந்து நிமிடத்தில் பதிலும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
சிசிடிவி கேமராக்களும் விளக்குகளும் வெளிச்சமும் இல்லாத இடங்களே இல்லை என்ற வகையில் ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ் (Zero Dark Spots) உருவாக்கப்படும். பெண்கள் பாதுகாப்பை 24×7 கண்காணிப்பு செய்ய முடியுமா என்ற கேள்விக்கான பதிலாக ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கமாண்ட் சென்டர்ஸ் (State-of-the-art Command Centres) அமைத்துச் சிசிடிவி நெட்வொர்க்குகளைக் கண்காணிக்கவும், அவசர நிலைகளை அந்த நேரத்திலேயே கண்காணிக்கவும், அதற்கான விரைவான பதிலை உறுதி செய்யவும் அதிநவீனக் கட்டளை மையங்களை அமைத்துப் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
அடுத்து, பெண்களுக்கு மிகவும் தேவையான நாட்களில் பொது விநியோகம் நடக்கும் இடங்களான ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லாச் சானிட்டரி பேட்ஸ் வழங்குவது உறுதி செய்யப்படும். இது ஏன் சொல்றேன்னா இது இப்போ ஒழுங்கா நடக்குறது இல்லை. அதனால்தான் அதைச் சொல்ல வேண்டிய அவசியமே இருக்கு. இது இப்போ முழுமையாக ஒழுங்கா முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்பது நமக்கு நல்லாவே தெரியும்.
5 லட்சம் வரை வட்டியில்லா நிதி
அடுத்து, சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம். நிலுவையில் உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதன் மூலமும், பெண்கள் நடத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் வரை வட்டியில்லா நிதியை வழங்குவதன் மூலமும் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படும். சுயஉதவிக் குழுக்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.இ-களாக மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் வழங்கப்படும். அதாவது 100% மானியமாகவே வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அடுத்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். ஒவ்வொரு பெண்ணிற்கும் குழந்தை பிறக்கும் தருணம் என்பது ஒரு மறுபிறவி. அந்த மகிழ்ச்சியான தருணத்தில் அந்தப் பெண்ணிற்கும் அந்தக் குழந்தைக்கும் ஒரு தாய்மாமனாக இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் அல்லது தங்க மோதிரம் அன்பளிப்பாக வழங்கப்படும். கூடவே பேபி வெல்கம் கிட் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
