வைஃபை ஆன் செய்ததும், “எம் பணம் பணம்…எம் பணம் ஒம் பணம் எம் பணம்” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..
என்னப்பா எலக்ஷன் வசூலா?
எலக்ஷன்னாலே பணம் விளையாடும்தானே.. தொகுதிகளை ஒதுக்குறதுல கூட்டணி கட்சிகள் ரொம்பவே பிஸியா இருக்குது.. அடுத்தது வேட்பாளர்கள் தெர்வுக்கான நேர்காணல் நடக்க போகுது..
எல்லா கட்சியிலும் பணத்தை கட்டி விருப்ப மனு கொடுத்தவங்க வெயிட்டிங் பண்றாங்க..
திமுகவுல சீட்டு வாங்குறதுக்கு கடும் போட்டி இருக்குய்யா.. வேட்பாளராகிடனும்னு நினைக்கிறவங்க உள்ளூர்ல மாவட்ட செயலாளர் தொடங்கி சென்னையில துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், சிஎம் குடும்பத்தினர், சபரீசன் வீடு என திரும்பின பக்கமெல்லாம் முட்டி மோதுறாங்க…
இதுல சபரீசன் ரொம்பவே டென்ஷனாகி, சீட்டு விஷயமா யார் பார்க்கனும்னு வந்தாலும் அப்பாயிண்ட்மென்ட் இல்லைன்னு சொல்லிடுங்கன்னு கறாரா சொல்லிட்டாராம்.. ஆனாலும் பல திமுக நிர்வாகிகள் சபரீசனை பார்த்துடனும்னு அவரோட வீட்டை சுத்திகிட்டே இருக்காங்கய்யா..
சரி.. திமுகவுல எப்ப வேட்பாளர்கள் நேர்காணல் நடக்க போகுதாம்?
திமுகவுல 15,372 பேரு தேர்தல்ல போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்காங்கய்யா..
திமுகவுல முந்தைய காலத்துல எல்லாம் எலக்ஷன்ல நிக்கனும்னு நினைக்கிறவங்க லோக்கல் மா.செ, அமைச்சர்கிட்ட போய் கேட்பாங்க.. ”நீ வேணாம்யா.. அவரு நிக்கட்டும்.. நீ எதுக்கு காசை கட்டி வீணாக்குற”ன்னு ஓபனா சொல்லிடுவாங்க.. அதையும் மீறி ஒன்றிரண்டு பேர், கலைஞரை பார்க்கனும் ஸ்டாலினை பார்க்கனும்னு பணம் கட்டுவாங்க..
ஆனா இப்பவெல்லாம் மா.செ.க்கள், மந்திரிகள் கிட்ட போய் யாரு கேட்டாலும்.. ”சரிப்பா போய் பணம் கட்டிட்டு வா.. நம்ம கையிலா இருக்கு.. மேலதான் முடிவு செய்யுறாங்க”ன்னு வழியனுப்புற வழக்கம் வந்துடுச்சு..
திருச்சியில திமுக மாநாடு நாளை மறுநாள் நடக்குது.. அது முடிஞ்சபிறகுதான் விருப்ப மனு கொடுத்தவங்ககிட்ட நேர்காணல் நடத்த ஸ்டாலின் திட்டமிட்டிருக்காரு..
வேட்பாளர்களை ஸ்டாலின் எப்படி தேர்வு செய்வாருன்னு நாம ஏற்கனவே சொல்லி இருந்தோம்.. ”2019, 2021 எலக்ஷன்கள்ல வியூக வகுப்பு டீம் ஒரு தொகுதிக்கு 3 பேருன்னு வேட்பாளர் லிஸ்ட்டை ரெடி செஞ்சது. இதை தெரிஞ்சுகிட்ட ஒரு டீம் அந்த 3 பேரிடமும் பணம் வசூலிச்சது.. வேட்பாளரா அறிவிச்சவங்ககிட்ட நாங்க சொல்லித்தான் நீங்க செலக்ட் ஆகினீங்கன்னு கணக்கை செட்டில் செஞ்சுருச்சு.. மத்த 2 பேருக்கும் பாதி பணத்தை கொடுத்தும் கொடுக்காமலும் சிஎம் வரைக்கும் கம்ப்ளெயிண்ட் ஆகிடுச்சு.. இன்னுமே இந்த அக்கப்போர் முடியலை… அதனால, வழக்கம் போல உளவுத்துறை ஒரு தொகுதிக்கு 3 பேரை செலக்ட் செஞ்சு ரிப்போர்ட் தரும்.. அதோட PEN டீம் ஒரு 3 பேர் கொண்ட ரிப்போர்ட் கொடுக்கும்.. இவங்க இல்லாம இன்னொரு ஏஜென்சிகிட்டயும் ரிப்போர்ட் கேட்டிருக்காரு சிஎம். ஆக ஒரு தொகுதிக்கு 9 பேரை தன் டேபிளில் வெச்சு பைனலா தாமே ஒருவரை செலக்ட் செய்ய போறாரு சிஎம்.. இப்படி செஞ்சுட்டா ஒரு புகாரும் வராதுன்னு நினைக்கிறாரு”ன்னு போன வருஷம் டிசம்பர் மாதமே டீட்டெய்லா நம்ம மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில சொல்லி இருந்தோம்..
இப்ப ஸ்டாலின் என்ன செய்வாருன்னு விசாரிச்சப்ப, ”ஒவ்வொரு தொகுதிக்கும் தோராயமா இன்னார்தான் வேட்பாளர்னு ஸ்டாலின் முடிவு செஞ்சு வெச்சிருக்கிறாரு..
ஸ்டாலினைப் பொறுத்தவரைக்கும் ”பலம்” வாய்ந்தவரா இருக்கனும்.. ஜெயிக்கக் கூடிய வேட்பாளராக இருக்கனும்னு நினைக்கிறாரு.. இந்த டைம் பழைய ஆட்களில் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் போல தெரியுது” என்கின்றனர்.
சரி.. காங்கிரஸ் கட்சியில வேட்பாளர் தேர்வு எப்படி இருக்க போகுதாம்?
திமுக கூட்டணியில காங்கிரஸ் போராடி 28 சீட் வாங்கியிருக்கு.. ஏற்கனவே விருப்ப மனு கொடுத்தவங்களில்ல யார் யார் பெஸ்ட் கேண்டிடேட்னு செலக்ட் செய்ய ஒரு டீமை சென்னைக்கு அனுப்பி இருக்கிறாராம் ராகுல்..
இந்த டைம் காங்கிரஸுல புது முகங்களுக்கு சரிபாதி வாய்ப்பு கிடைக்குமாம்.. 28 சீட் வாங்கியிருக்கிற காங்கிரஸ் கட்சியில 15 பேர் புதுமுகங்களாக இருக்க சான்ஸ் அதிகமாம்.. ஏன்னா, “கட்சிக்காக ஆர்வமாக ரொம்ப காலமா உழைச்சவங்களுக்கு சீட் கொடுக்கனும்”னு ராகுல் ஸ்டிரிட் ஆர்டர் போட்டிருக்கிறாராம்.. அதனால இந்த முறை புதுமுகங்களுக்கு சான்ஸ் அதிகம்னு சொல்றாங்க..
அதிமுகவுல எப்ப நேர்காணல் நடக்க போகுதாம்?
அதிமுகவுல 10,175 பேர் விருப்ப மனு கொடுத்திருக்காங்க.. இப்படி விருப்ப மனு கொடுத்தவங்க எடப்பாடி பழனிசாமியை போய் பார்த்து பேசிடலாம்னு அவர் வீட்டுக்கும் போறாங்க..
‘சீட்’டு கேட்டுதான் வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சா போதுமாம்.. உடனே எடப்பாடி தரப்புல அவங்களை அன்பா ‘உட்காருங்க.. உட்காருங்க’ன்னு சொல்லிடுறாங்க..
எப்படியாவது சீட் கொடுங்கன்னு கேட்கிறவங்ககிட்ட, “சரி.. கொடுத்துடலாம்.. முதல்ல கட்சிக்கு ரூ.10 கோடி பணத்தை கட்டிடுங்க.. மிச்சத்தை அப்புறம் பார்க்கலாம்”னு சொல்றாங்களாம்.. அதனால சில பேரு ரூ.10 கோடியை ‘கட்சி’க்காக கட்டிட்டு காத்திருக்காங்களாம்..
சீட் கேட்கிற மாஜி மந்திரிங்ககிட்ட எல்லாம், “நீங்களே எலக்ஷன் செலவை பார்த்துக்குங்க.. உங்களுக்குதான் மந்திரி பதவி.. அதனால உங்க மாவட்டத்துல இருக்கிற 5,6 தொகுதி செலவையும் சேர்த்து பார்த்திடுங்க”ன்னு ரொம்பவே கூலா சொல்லிடுறாராம் எடப்பாடி..
அதிமுகவுல பணம்.. பணம்தான் விளையாடுதுன்னு தெரிஞ்சுகிட்டு சென்னையில ஓட்டல் போட்டு தங்கியிருக்கிற சில அதிமுக பிரமுகர்கள், “எலக்ஷன் கிரவுண்ட்டும் சரியில்லை.. கட்சியிலேயும் நிலைமையும் சரியில்லையே.. நமக்கு எங்க சீட்டு கிடைக்கும்”னு நொந்தபடி சொந்த ஊருக்கு கிளம்பிகிட்டு இருக்காங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.
