சென்னையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் தமிழ் கல்வெட்டியல் பற்றிய நான்கு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நேற்று (பிப்ரவரி 11) தொடங்கியது
இந்த மாநாட்டில் சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் சார்லோட் ஸ்மித் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
அதில், “உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான எகிப்த் மண்ணில், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் ஒருவரின் பெயர் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
“சிகை கொற்றன்” என்ற பெயர், மன்னர்களின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பிரமிடு கல்லறைகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அதாவது ”சிகை கொற்றான் வர கண்ட” என தமிழ் பிராமியில் எழுதப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சங்க காலத் தமிழர்களின் கடல் கடந்த வர்த்தகச் செழிப்பையும், உலக அரங்கில் அவர்களின் வரலாற்றுப் பங்களிப்பையும் மீண்டும் உரக்கச் சொல்கிறது.
பேராசிரியர்கள் 2024-2025 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட விரிவான ஆய்வில் இந்த அரிய கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது.
எகிப்தின் தீபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் கண்டறியப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகளில், 20 கல்வெட்டுகள் தமிழ் பிராமி மொழியிலும், மீதமுள்ளவை பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழியிலும் உள்ளன.
தமிழ் வணிகர்கள் வெறும் கடற்கரையோடு நிற்காமல், எகிப்தின் செங்கடல் துறைமுகமான பெரெனிகே வரை சென்று, அங்கிருந்து நைல் நதிப் பள்ளத்தாக்கின் உட்பகுதி வரை பயணம் செய்து, வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
“சிகை கொற்றன்” மட்டுமல்லாமல், “கோபான் வர கண்டன்” (கோபன் வந்து பார்த்தான்), “சாத்தன்” மற்றும் “கீரன்” போன்ற வேறு சில தமிழ் பெயர்களும் இந்தக் கல்லறைகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், “கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.
ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
