காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா MBBS போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண். இவர் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தாலும் இவரது இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான ஜேஜே படத்தை கொண்டாடுவதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 20 Years of Jay Jay Movie Celebration
தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான காதல் திரைப்படங்களிலேயே தனித்துவமான கதைக்களத்தை கொண்ட ஓர் எவர்கிரீன் லவ் ஸ்டோரி படமாக இன்று வரை ஜேஜே படம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்த ஜேஜே படம் வெளியாகி இன்றோடு (நவம்பர் 14) 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஜேஜே படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நமது மின்னம்பலம் பிளஸ் யூட்யூப் சேனலுக்கு இயக்குனர் சரண் அளித்த பேட்டியில் ஜேஜே படம் உருவான கதை, நடிகர் மாதவன் குறித்து தகவல், நடிகர் விஜய்யுடனான உரையாடல், நடிகை ஷாலினி அஜித்குமார் சொன்ன ஐடியா என பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்குனர் சரண் மின்னம்பலம் பிளஸ் சேனலுடன் பகிர்ந்து கொண்ட அந்த சுவாரசியமான தகவல்கள் இதோ உங்களுக்காக..
ஜே ஜே கதை உருவான விதம்..!
நடிகர் விக்ரமின் ஜெமினி படம் முடிந்த பிறகு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க ஒப்பந்தமாக இருந்தேன். அந்த நேரத்தில் ஜெமினி படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்க வாய்ப்பு கிடைத்ததால் முதலில் அதை முடித்த பின் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு படம் இயக்கலாம் என்று முடிவு எடுத்தேன். ஜெமினியின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பின் போது அந்த படத்தின் எழுத்தாளர் ஒருவர் ஒரு ஆங்கில படம் குறித்து என்னிடம் சொன்னார். அந்த படம் விதி மற்றும் ரூபாய் நோட்டை மையமாக கொண்ட வித்தியாசமான கதையாக இருந்தால் அந்த படத்தின் ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு முடிந்த பின் அந்த கதையின் கருவை மட்டும் கொண்டு ஓர் காதல் கதையை எழுதத் தொடங்கினேன். கொல்கத்தா எனக்கு மிகவும் பிடித்த ஊர் என்பதால் அந்த ஊரை பின்னணியாக வைத்து திரைக்கதையை அமைத்தேன். இப்படி தான் ஜே ஜே கதை உருவானது.
ஜேஜே டைட்டிலும் விஜய்யும்..!
கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் படத்தை இயக்க கமிட் ஆகிருந்தேன். அந்தப் படத்திற்கு தான் முதலில் “ஜேஜே” என்று டைட்டில் யோசித்து வைத்திருந்தேன். அந்த கதையின்படி படத்தில் இரவு காட்சிகள் அதிகமாக இருந்தது, நிறைய கெட்டப்களும் இருந்தது. அந்த காலகட்டத்தில் நடிகர் விஜய் “தற்போதைக்கு இந்த படம் வேண்டாம், இன்னும் கொஞ்ச காலம் கழித்து இந்த படம் எடுத்தால்தான் சரியாக இருக்கும்” என்று சொன்னதால் அந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது.
அதன் பிறகு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு படம் இயக்க ஒப்புக்கொண்ட போது அந்த படத்திற்கு ஜேஜே என்று டைட்டில் வைத்து விட்டேன். டைட்டிலுக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களுக்கும் ஜெகன், ஜமுனா என்று பெயர் சூட்டினேன். சில நாட்களுக்குப் பிறகு நடிகர் விஜய் எனக்கு போன் செய்து அந்த ஜேஜே என்ற டைட்டிலை தனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டார். ஆனால் நான் வேறு நிறுவனத்திடம் இந்த டைட்டிலை சொல்லி ஓகே வாங்கிவிட்டேன். தற்போது இந்த டைட்டிலை உங்களுக்கு தர முடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன் என்று மிகவும் வருத்தத்துடன் அவரிடம் கூறினேன்.
சென்சார் போர்ட் மேலிருந்த பயம்..!
ஜேஜே படத்தின் படபிடிப்பு தொடங்கிய பின் எனக்குள் ஒரு பயம் இருந்தது. ரூபாய் நோட்டில் எழுதுவது சட்டப்படி குற்றம் என்பதால் சென்சார் போர்ட் இந்த ரூபாய் நோட்டு காட்சிகளை கட் செய்ய சொல்லிவிடுவார்களோ என்று மிகவும் பயந்தேன். இதைப் பற்றி தயாரிப்பாளர் இடமும் சொல்ல முடியாது. அந்த நேரம் தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது சுந்தர ராமசாமி எழுதிய பிரபலமான ஜே ஜே சில குறிப்புகள் புத்தகத்திற்கும் என் படத்தின் டைட்டிலுக்கும் தொடர்பு இருப்பதால் அந்தப் புத்தகத்தை படத்தில் கொண்டு வந்து அந்த புத்தகத்தில் ஹீரோயின் தனது வீட்டு முகவரியை எழுதும்படி காட்சி அமைத்தேன். ஒருவேளை சென்சார் போர்டு அந்த ரூபாய் நோட்டு காட்சிகளை கட் செய்தாலும் இந்த புத்தகம் இருப்பதால் திரைக்கதையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்பினேன்.
ஹீரோயினை ஆடிஷன் செய்த மாதவன்..!
நடிகர் மாதவன் ஆஸ்திரேலியாவில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ஜே ஜே படத்தின் கதையை இ-மெயிலில் அனுப்பினேன். மாதவனுக்கு அந்த கதை பிடித்த உடன் அவரும் இ- மெயிலில் ரிப்ளை செய்தார். அதன் பிறகு ஹீரோயின் தேடலில் இருந்தபோது நிஷா கோத்தாரியின் புகைப்படத்தை பார்த்தேன். நான் யோசித்தது போலவே இந்த கதைக்கு அவர் பொருத்தமாக இருந்தார். நிஷா கோத்தாரி மும்பையில் இருந்ததால் ஆடிஷனுக்கு என்னால் செல்ல முடியவில்லை. நடிகர் மாதவன் அப்போது மும்பையில் படப்பிடிப்பில் இருந்தார். அந்த சமயம் இந்த ஹீரோயினை பற்றி மாதவனிடம் கூறி அவரை ஆடிஷன் செய்யுமாறு நான் கேட்டுக் கொண்டேன்.
அதன்பிறகு நிஷா கோத்தாரியை ஆடிஷன் செய்து மாதவன் தான் ஓகே சொன்னார். அந்த நேரத்தில் நிஷா கோத்தாரிக்கு நெத்தியில் ஏதோ அடிபட்டு பிளஸ் வடிவத்தில் ஒரு தழும்பு இருந்தது. அந்த தழும்பை பார்த்தவுடன், அந்த தழும்பை மேக்கப் போட்டு மறைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு அந்த தழும்பையும் கதையில் ஒரு அங்கமாக மாற்றிக் கொண்டேன். மேலும் அந்த தழும்பை வைத்து ஒரு காமெடி சீனையும் படத்தில் இணைத்துக் கொண்டேன்.
பூஜாவை சஜெஸ்ட் செய்த ஷாலினி அஜித்..!
ஜேஜே படத்தில் சீமா கதாபாத்திரத்திற்கு நடிகை பூஜா பொருத்தமாக இருப்பார் என்று ஷாலினி அஜித்குமார் தான் பரிந்துரை செய்தார். அவர் சொன்ன பிறகுதான் பூஜாவின் புகைப்படத்தை நான் பார்த்தேன். எனக்கும் இந்த கதைக்கு எல்லாவிதத்திலும் பூஜா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அதன் பிறகு இந்த படத்தில் பூஜாவை கமிட் செய்தேன். மாதவன், நிஷா கோத்தாரி, பூஜா இவர்கள் மூவருக்கு இடையிலும் ஒரு வேவ் லென்த் இருக்க வேண்டும், அந்த கதாபாத்திரங்களை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க போட்டோ ஷூட் செய்தோம்.
ஜேஜே படத்தில் கலாபவன் மணி இணைந்த தருணம்..!
ஜெமினி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கலாபவன் மணி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எனக்கு போன் செய்து பேசும்போது நான் ஜே ஜே படம் பற்றி அவரிடம் சொன்னேன். அவர் எனக்கு ஏதேனும் கதாபாத்திரம் உள்ளதா என்று என்னிடம் கேட்டார், ஆனால் அப்போது அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் எதுவும் படத்தில் இல்லை. அதன் பிறகும் அவர் மீண்டும் இந்த படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியவுடன் நான் ஒரு திருடன் கதாபாத்திரத்தை எழுதி, அதில் கலாபவன் மணி அவர்களை நடிக்க வைத்தேன். ஆனால் அந்த கேரக்டர் வெறும் காமெடிக்காக மட்டும் இல்லாமல், அந்த கேரக்டர் மூலமாகத்தான் அந்த ரூபாய் நோட்டு கிடைப்பது போல காட்சி அமைத்து கலாபவன் மணியின் கதாபாத்திரத்தை சுவாரசியமாக மாற்றினேன்.
ஜேஜே படம் குறித்து இதுபோன்ற பல தகவல்களை இயக்குனர் சரண் 20 Years of Jay Jay Celebration part 1 வீடியோவில் நம்முடன் பகிர்ந்து கொண்டார். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் Part 2 வீடியோவில் வெளியாக இருக்கிறது.
நீங்களும் இயக்குனர் சரணின் ஜேஜே படத்திற்கு மிகப்பெரிய ரசிகராக இருந்தால் ஒரு லைக் போடுங்கள்… 20 Years of Jay Jay Movie Celebration
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…