சென்னை நட்சத்திர ஹோட்டலில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தூத்துக்குடியில் நேற்று (மே 5) கைது செய்தனர். robbed from businessman at Chennai hotel
சென்னை அண்ணா நகர் 17-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். தொழிலதிபரான இவர், வைரக்கல் வியாபாரம் செய்து வருகிறார்.
மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 17 கேரட் வைர நகைகளை விற்பதற்காக இடைத்தரர்களான மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பன், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராகுல் ஆகியோரை சந்திரசேகர் அணுகியுள்ளார்.
இதனையடுத்து லண்டன் ராஜன் என்பவரையும் அவரது நண்பர் விஜய், உதவியாளர் அருணாச்சலம் ஆகியோரை அழைத்துகொண்டு சந்திரசேகரன் வீட்டிற்கு இடைத்தரகர்கள் சென்றுள்ளனர். அப்போது 17 கேரட் வைர நகைக்கு ரூ.23 கோடி விலை கொடுத்து அதை வாங்கிக் கொள்வதாக உறுதியளித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

கடந்த மே 4-ஆம் தேதி சந்திரசேகரனை தொடர்புகொண்ட இடைத்தரகர்கள், வைர நகையை வாங்க வந்த நபர் வடபழனி நட்சத்திர ஓட்டலில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சந்திர சேகரன் தனது மகள் ஜானகியுடன் ஓட்டலுக்கு சென்றார். பின்னர் இடைத்தரர்கள் கூறிய அறைக்கு சந்திரசேகர் மட்டும் சென்றார்.
நீண்ட நேரமாகியும் சந்திரசேகரன் அறையில் இருந்து வெளியே வராததால், மகள் ஜானகி அறைக்குள் சென்று பார்த்தபோது, அவரது தந்தை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சேரில் அமர்ந்திருந்தார். அப்போது கொள்ளையர்கள் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜானகி, உடனடியாக வடபழனி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு வடபழனி காவல் நிலைய உதவி ஆணையர் கெளதமன் வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் உடனடியாக சென்னை கமிஷனர் அருண் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. உடனடியாக நான்கு தனிப்படைகளை அமைத்து கமிஷனர் உத்தரவிட்டார்.
ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது, வைரத்தை கொள்ளையடித்துவிட்டு தார் காரில் இடைத்தரகர்கள் தப்பிச்சென்றது தெரியவந்தது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட வாட்ஸப் குழுக்களில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, “சென்னையில் இவர் ஒரு பெரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை என தென் மாவட்டத்தைச் சேர்ந்தவரைப் போல தான் இருக்கிறார். இவரை பற்றி தகவல் தெரிந்தால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்தவும்” என்று அலெர்ட் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
மேலும், காரின் பதிவு எண்ணை அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பி உஷார்படுத்தினார். இந்தநிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் அருகில் கொள்ளையர்கள் பயன்படுத்திய தார் கார் சென்று கொண்டிருந்த போது, அந்தக் காரில் ஃபாஸ்டேக் ஒட்டாததால் டோல்கேட் ஊழியர்களுக்கும் காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த டோல்கேட் ஊழியர்கள், புதியம்புத்தூர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும், கொள்ளை கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். அவர்களை புதியம்புத்தூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
உடனடியாக காரில் இருந்த சென்னை அய்யப்பந்தாங்கலைச் சேர்ந்த ஜான் லாயட், வளசரவாக்கத்தைச் சேர்ந்த விஜய், திருவள்ளூரைச் சேர்ந்த கொல்லம்மேடு, சிவன்கோவிலைச் சேர்ந்த ரத்தீஷ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருண்பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து புதியம்புத்தூர் போலீசார், சென்னை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், தனிப்படையினர் புதியம்புத்தூர் விரைந்தனர். கொள்ளையர்களை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து வைர நகைகளை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் போலீஸ் கொள்ளையர்களை கைது செய்திருப்பது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. robbed from businessman at Chennai hotel