கரூர் துயர சம்பவ வழக்கை விசாரிக்க நீதிமன்ற நியமித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவில் இரண்டு பெண் எஸ்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்தில் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி செந்தில் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வெற்றிக் கழக கட்சியினருக்கு காட்டமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, கரூர் சம்பவத்தில் பாரபட்சமற்ற மற்றும் முழுமையான விசாரணையை நடத்துவதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) நியமித்தார்.
அதன்படி இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தவிர்த்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா ஐபிஎஸ் மற்றும் CSCID காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோரும் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இது தவிர மேலும் 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.