கடலூரில் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்று (ஆகஸ்ட் 23) மதில்சுவர் சாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்த இரு பெண் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியதவி அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாலையில் உள்ள குடிகாடு பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழில் பேட்டையில் இந்தியன் பாஸ்பேட் லிமிடெட் கெமிக்கல் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இன்று மாலை 6 மணியளவில் அந்நிறுவனத்தின் மதில் சுவர் எதிர்பாராவிதமாக திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி அங்கு பணிபுரிந்துவந்த பூதங்கட்டி கம்பளிமேடு பகுதியைச் சேர்ந்த இளமதி (வயது 35) மற்றும் இந்திரா (வயது 32) ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்த இளமதி மற்றும் இந்திரா ஆகியோரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.