தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலை மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 25) அறிவித்த நிலையில், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
ஆசிரியராக இருந்து நாட்டின் 2வது குடியரசுத்தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 45 ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டது.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் புதுச்சேரியை சேர்ந்த ரெக்ஸ்(எ)ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியருக்கும் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் இவ்விருதினை வழங்குவார். விருதுடன், ரூபாய் 50 ஆயிரம் காசோலையாகவும், வெள்ளிப்பதக்கமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.