காவிரி ஆற்றில் அதிகரிக்கும் வெள்ளம்… விரையும் தேசிய பேரிடர் மீட்பு குழு!

Published On:

| By Minnambalam Desk

2 ndrf team moving to trichy for flood warning

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு இன்று (ஜூலை 27) விரைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பிஏபி தொகுப்பு அணைகள், அமராவதி அணை, பவானிசாகர் அணை, பில்லூர் அணை, மேட்டூர் அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

அமராவதி அணை நிலவரம்!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை கடந்த ஜூலை 16ல் நிரம்பிதை தொடர்ந்து, 41 நாட்களாக அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று மாலை 3 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியாக இருந்தது. அணையின் முழு கொள்ளவான 4,047 மில்லியன் கன அடியிலிருந்து 3866.09 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.வினாடிக்கு 5,447 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில் 6950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

தொடர்ச்சியாக உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்து வருவதால் திருப்பூர், கரூர் மாவட்டத்தில அமராவதி ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோலையாறு அணை நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முக்கிய அணையான சோலையாறு அணை கடந்த ஜூன் 26ல் நிரம்பியது. அணையின் நீர் மட்டம் 161.14 ஆக உள்ள நிலையில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் தற்போது வினாடிக்கு 3,982 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

பரம்பிக்குளம் அணை நிலவரம்

பரம்பிக்குளம் அணை 72 அடி உயரம் கொண்டது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 71.65 அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

ஆழியாறு அணை நிலவரம்

ஆழியாறு அணை 120 அடி உயரம் கொண்டது. இந்நிலையில் 118.85 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டுர் அணையின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று அதிகாலை நிலவரப்படி 35,400 கன அடியில் இருந்து 45,400 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து 60,000 கன அடியாக அதிகரிப்பட உள்ளது.

இன்று காலை 10 மணியளவில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். எனவே தொடர்ச்சியாக ஆறுகளின் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் குளிக்கவோ இறங்கவோ வேண்டாம். கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கோரிக்கையின்படி, அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரைப் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள புறப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share