இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பராசக்தி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
மொழிக்காக போராடி 1965 ஜனவரி 27ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். அவர் மறைவைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வீரியமடைந்தது. இதேபோல் மொழிப் போராட்டத்தின்போது 1965 மார்ச் 12ஆம் தேதி பொள்ளாச்சியில் 250 பேருக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களையும் மையமாக வைத்து தற்போது இந்தப் பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என விழாவில் பேசிய புலவர் செந்தலை ந.கவுதமன் தெரிவித்திருந்தார்.
மொழிபோராட்டம் தொடங்கி 60 ஆண்டுகளை கடந்து இன்றும் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டிசர்ட் அணியும் இளைஞர்களுக்கு மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
இந்த படம் குறித்து மின்னம்பலம் சார்பில் புலவர் செந்தலை ந. கவுதமனிடம் பேசினோம். அவர் அளித்த விரிவான பேட்டி:
பராசக்தி படம் எப்படி இருக்கும்?
படம் வெளிவந்த பிறகுதான் அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரியவரும். பார்க்கலாம்.
இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இன்றைய இளைஞர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்கள்?
இப்போதும் எதுவும் மாறவில்லை. அதே நிலைதான் நீடிக்கிறது. இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்தவர் பூலித்தேவன். விடுதலைப் போரில் மிக அதிக தண்டனை பெற்றது வ.உ.சிதம்பரனார்தான். வடநாட்டுக்காரர்கள் யாரும் கிடையாது. இவ்வளவு தியாகம் செய்த நமக்கு மற்ற மொழிகளுக்கு இணையான உரிமை இன்றுவரை இல்லை. முதலில் மொழியில் சமத்துவம் இருந்தால்தான், பிற மொழி பேசும் இனங்களுக்கு இடையே சமத்துவம் உருவாகும்.
நம்மை மொழி வெறியர்கள் என்று எண்ணிய கர்நாடகா, மகாராஷ்டிரா மக்கள் இப்போது நம்மைப் பார்த்து வியப்படைகிறார்கள். காரணம் உலகத் தொலைக்காட்சிகள் எல்லாம் இந்தி அல்லது தமிழில் மட்டும் பேசுகின்றன. அவர்கள் இந்தியை ஏற்றுக்கொண்டதால் வேலைவாய்ப்பு, மிகப் பெரிய விற்பனைச் சந்தை, அதிகார சமத்துவத்தை இழந்துவிட்டோம் என்பதை இப்போது உணர்கிறார்கள். தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் இதையெல்லாம் நமக்குப் பெற்றுக்கொடுத்தது. இந்திக்கு இடமில்லை எனக் கூறி 1968 ஜனவரி 25இல் அறிஞர் அண்ணா இருமொழிச் சட்டம் இயற்றினார். அதனால் இன்று நம் இளைஞர்கள் உலகம் முழுவதும் பணியாற்றுகிறார்கள்.
தமிழகத்தில் 4 இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 1965இல் 50 நாட்கள் வரை நடந்த மொழிப் போராட்டத்தில் 500க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக தமிழகத்திற்கு மட்டும் இந்தி ஆட்சி மொழி என்பதில் இருந்து விதிவிலக்கு கொடுத்தனர். ஆனால் இதன் முழுப் பயன் இதுவரை கிடைக்கவில்லை. ஒன்றிய அரசில் உள்ள 97 அதிகாரப் பிரிவுகளில் வெறும் 16 துறைகளில் மட்டும்தான் இந்தியோடு ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற துறைகளில் இந்தி மட்டும்தான் இன்றளவும் உள்ளது.
இதில் 1959இல் நமது நியாயங்களைப் புரிந்துகொண்டு ஆதரவான வாக்குறுதி கொடுத்தவர் நேரு. அன்றைக்கு 8ஆவது அட்டவணையில் இருந்த 14 மொழிகளையும் தேசிய மொழி என்று அறிவித்தார். இன்றைக்கு உள்ள 22 மொழிகளையும் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழியாக்குங்கள் என்று இன்றும் நாம் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இப்படி 60 ஆண்டு காலமாக பேசுபொருளாக உள்ள இந்தப் பிரச்சனையைப் பேசுவதால் இந்தப் பராசக்தி திரைப்படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பதற்குள் நம்மால் ஆன விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் .
படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும். தமிழகத்தில் மொழியின் உணர்வு தமிழகத்தில் இன்றும் பட்டுப்போகவில்லை. 1967க்குப் பிறகு இங்கு எந்த அகில இந்திய தேசியக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியவில்லை. 1965 மொழிப் போரில் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய இராணுவம் உள்நாட்டு மக்களை கொன்று குவித்தது. இதற்கு ஆங்கிலேயருக்கு இவ்வளவு காலம் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள், இனி இந்திக்காரர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடங்கள் என்றுதானே பொருள். விடுதலை எல்லோருக்கும் தானே கிடைத்தது. எனவே மொழிகளுக்கிடையே சமத்துவம் வந்தால் தான் மொழி பேசும் மக்களுக்கு இடையே சமத்துவம் வரும் என்பது அடிப்படை விதி.
தமிழகத்தில் மொழிப் போராட்ட வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அடுத்த சில மாதங்களில் தேர்தல் வரும் நேரத்தில் வெளியாவது வணிக நோக்கமா? அரசியல் நோக்கமா?
இதை நாம் அவரவர் பார்வையில் பார்த்துக்கொள்ளலாம். படம் வெளிவருவது தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைப் பொறுத்தது. அதனால் தேர்தலையும் பட வெளியாகும் நேரத்தையும் முடிச்சுப் போட வேண்டியதில்லை. அப்படி முடிச்சுப் போட்டாலும் தவறு இல்லை.
படத்தின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் சிறு பகுதியேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
கட்டாயமாக இருக்கும். மக்கள் மறந்துள்ள உணர்வுகளையெல்லாம் மறுபடியும் புதுப்பித்துக் கொடுக்கும் இல்லையா. இந்த திரை வடிவம் என்பது நல்ல ஆற்றல் உள்ள வடிவம் இல்லையா?
இன்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும்போது வாசலிலேயே இருப்பது ராஜேந்திரனின் சிலைதான். அந்தச் சிலையைப் பார்த்துவிட்டுச் செல்லும் அந்த மாணவர்கள் கூட இந்தப் படத்தைப் பார்த்தால் இத்தனை வரலாறு இதற்குள் இருக்கிறது என்று உணர்ந்துகொள்வார்கள். பின்னோக்கிப் பார்த்தால் முன்னோக்கிப் பாய முடியும்.
இதுபோல் தமிழக வரலாற்றில் வேறு எந்தப் பிரச்சனையை கலை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழகத்தைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு என்பது வந்ததால்தான் ஆளுக்கு ஒரு பட்டத்தை வாங்கிக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் 1921இல் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பல போராட்டங்களுக்குப் பின்னர் 1927இல்தான் நடைமுறைக்கு வந்தது. 1934இல் பெரியார் ஒன்றிய அரசிடமும் இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்து விட்டார். ஆனால் 1950இல் அரசியல் சாசன சட்டம் கொண்டுவரப்பட்டபோது அனைத்தையும் துடைத்தெடுத்துவிட்டனர். அதை எதிர்த்து பெரியார் போராடியதால்தான் அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டில் பெரியார், அம்பேத்கரின் பங்களிப்பு அளப்பரியது. இந்தக் கருப்பொருளைத் திரைமொழியில் கொண்டுவந்தால் அது இன்றைய தலைமுறைக்கு எளிமையாகக் கொண்டு செல்ல முடியும்.
