187 ஊர்காவல் படை பணிகளுக்கு 8000 இளைஞர்கள் தேர்வு எழுத வந்தது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டக் காவல்துறையினரால் ஊர்க்காவல் படை பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 187 பணிகள் காலியாக இருப்பதாகவும் 5ஆம் வகுப்பு வரை படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வை எழுத அந்த மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இப்பணிக்கு சுமார் 8000 பேர் விண்ணப்பித்து தேர்வெழுத வந்துள்ளனர். இவ்வளவு பேர் வருவார்கள் என மாவட்ட காவல்துறை எதிர்பார்க்கவில்லை. எனவே, திட்டமிடப்பட்ட தேர்வு மையத்தில் இவ்வளவு பேரை அனுமதிக்க முடியாது என்பதால் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமாதர்பாலி என்ற விமான ஓடுதளத்தில் இந்தத் தேர்வை நடத்தியுள்ளனர்.
பள்ளிகளில் மாணவர்களை மைதானங்களில் வரிசையாக அமரவைத்து ஆசிரியர்கள் படிக்கவைப்பது போல, ஓடுதளத்தில் 8000 பேரை வரிசையாக அமரவைத்து கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தேர்வை நடத்தினர்.
50 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை ட்ரோன்களை பறக்கவிட்டு அதிகாரிகள் கண்காணித்தனர்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணி என்ற போதிலும், பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படித்தவர்கள் எனப் பலரும் இந்த தேர்வை எழுதினர்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்ததாகப் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
விமானங்கள் ஏறி இறங்க வேண்டிய ஓடுதளத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அமர்ந்து தேர்வு எழுதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
1.07நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை அப்படியே கடந்துவிட முடியாது. இது இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக எந்த அளவுக்குப் போராடுகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
இந்திய அளவில் வேலையின்மை விகிதம் நவம்பர் 2025-ல் 4.7% ஆகக் குறைந்து, கடந்த ஏப்ரலுக்குப் பிறகு மிகக் குறைந்த நிலையை எட்டியிருப்பதாக தரவுகள் கூறுகின்றன.
அதாவது அக்டோபர் 2025-ல் 5.2% ஆகவும், ஆகஸ்ட் 2025-ல் 5.1% ஆகவும் இருந்த தேசிய வேலையின்மை விகிதம், இப்போது 4.7% ஆக குறைந்திருக்கிறது என்பது மத்திய அரசின் தகவல். ஆனால் களநிலவரம் வேறு என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
