நாட்டின் தபால் துறையில் 171 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் பதிவு தபால் சேவை (Register Post- ரிஜிஸ்டர் போஸ்ட்) செப்டம்பர் 1-ந் தேதியுடன் கைவிடப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1766-ம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ், கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகத்தின் கீழ் கம்பெனி மெயில் என்கிற தபால் சேவையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 1854-ம் ஆண்டு லார்ட் டல்ஹவுசி காலத்தில் இந்திய தபால் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பதிவு தபால் சேவை நடைமுறைக்கு வந்தது. கடந்த 171 ஆண்டுகளாக பதிவு தபால் சேவை (Register Post) நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது இந்த ரிஜிஸ்டர் போஸ்ட் சேவையானது செப்டம்பர் 1-ந் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ‘தந்தி’ அனுப்புவதும் கைவிடப்பட்டது.
தற்போது ரிஜிஸ்டர் போஸ்ட் முறை கைவிடப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஸ்பீட் போஸ்ட் (விரைவுத் தபால் சேவை- Speed Post) சேவையுடன் இணைக்கப்படுகிறது. ரிஜிஸ்டர் போஸ்ட் சேவையை ஒப்பிடுகையில் ஸ்பீட் போஸ்ட் சேவை, பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறது அஞ்சல் துறை.
ஆனால் ரிஜிஸ்டர் தபால் சேவையை ரத்து செய்வது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையைத்தான் தரும் என்கிறார் மதுரை எம்பி சு.வெங்கடேசன் இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன்,
- பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ 26.
விரைவுத் தபால் எனில் ரூ 41 - பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ 3. விரைவுத் தபாலில் ரூ 10
- பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும். விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும்.
- பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம். விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும். தூரம் கூடினாலும் கூடும்.
எல்லாம் எதற்கு? மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு.
“தக் சேவா; ஜன் சேவா” என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவையாம். உண்மையில் “மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” என விமர்சித்துள்ளார்.