திருத்தணி அருகே கருக்கலைப்பு செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகள் 17 வயது சிறுமி. அவர் நர்சிங் படித்து வந்துள்ளார். அந்த சிறுமி சகோதரர் உறவு முறையுடைய சிறுவனைக் காதலித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 17 வயது சிறுவனுடன் சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியதால் சிறுமியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதட்டூர் பேட்டை போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை சிறுமியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதனால் ஆந்திரா மாநிலம் பண்ணூர் சப் ஸ்டேஷன் பகுதியில் உள்ள நாட்டு வைத்தியரிடம் சிறுமியை கடந்த 13-ஆம் தேதி அழைத்துச் சென்று பெற்றோர் கருவை கலைத்துள்ளனர். இதனால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாகத் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த செவிலியர் வயலட் கனி, ஹரி பாபு ஆகியோரை கைது செய்துள்ளனர். சிறுமியுடன் தொடர்பிலிருந்த சிறுவனையும், சிறுமியின் பெற்றோரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.