கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் 16 நாட்கள் துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (அக்டோபர் 10) நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இறுதியில் தேதி குறிப்பிடாமல் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து இன்று மாலை சென்னை திரும்பிய ஆதவ் அர்ஜூனா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘ பொதுவாக நமது வீட்டிலோ குடும்பத்திலோ ஒரு பெரிய இழப்பு ஏற்படும்போது 16 நாட்கள் துக்கம் அனுசரிப்போம். வலியோடு இருப்போம்.
அப்படித்தான் எங்கள் தலைவரும் தமிழக வெற்றி கழகத்தினரும் 16 நாள் துக்கத்தில் உள்ளனர்.
41 பேர் உயிரிழந்து 16 நாள் முடிவடையும் வரையில் யாரும் பேச முடியாத அளவுக்கு மிகுந்த வலியோடு இருக்கிறோம்.
எங்களுடைய நியாயத்தை சொல்வதற்கோ எங்கள் மீதான அவதூறுகளுக்கு பதில் அளிக்கவோ முடியாமல் அந்த 41 பேரின் குடும்பத்தினரோடு வலிகளோடு கலந்து கொண்டிருக்கிறோம்.
16 நாட்கள் முடிந்ததும் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டிப்பாக சொல்வோம்.
அதற்கிடையில் எங்கள் மாவட்ட செயலாளர்களை , நிர்வாகிகளை பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை கைது செய்து கொண்டிருக்கிறது.
சாதாரண மக்களாக நீதித்துறையை நாடி எங்களது போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கான பயணத்திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
16ஆவது நாள் காரியம் முடிந்தவுடன் மற்ற விஷயங்களை பேசுவோம். உண்மை வெளியில் வரும்’ என்று கூறினார்