திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகள்.. முஸ்லிம் லீக்கை தொடர்ந்து மமக கோரிக்கை

Published On:

| By Mathi

DMK Mulsims

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு மொத்தம் 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் மனித நேய மக்கள் கட்சி குழு இன்று தொகுதிப் பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது: 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல் முதலே மனிதநேய மக்கள் கட்சி, திமுக கூட்டணியை மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் ஆதரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆழமான வேர்கள் உள்ளன.

ADVERTISEMENT

எங்களிடம் வலுவான இளைஞர் அணியும், பெண் தன்னார்வலர்களும் உள்ளனர்.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றதைக் கருத்தில் கொண்டும், இந்த முறை திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் குறைந்தது 5 இடங்களாவது ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், இதுவே இறுதியானது அல்ல; இன்னும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சரிடம் தெரிவிப்பதாக திமுக குழுவினர் உறுதி அளித்துள்ளனர். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி மதுரையில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தினோம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதை சுட்டிக்காட்டுவதே அந்த மாநாட்டின் நோக்கம். எனவே, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி, திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் 6.2% உள்ளனர். திமுக சமூக நீதிக் கொள்கைகளை நிலைநாட்டும் கட்சி என்பதால், முஸ்லிம் கூட்டணிக் கட்சிகள் மற்றும் திமுகவில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்களுக்குச் சேர்த்து மொத்தம் 16 இடங்களை திமுக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். மேலும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போகிறோம். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

ADVERTISEMENT

முஸ்லிம் லீக்

இதேபோல நேற்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கலைஞர் காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம் என கூறியிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share