ADVERTISEMENT

நிலச்சரிவில் சிக்கிய பேருந்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 15 பேர் பலி!

Published On:

| By christopher

15 including four from the same family were killed in bilaspur landslide

இமாச்சலப்பிரதேசத்தில் நேற்று (அக்டோபர் 7) இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து ஒன்று சிக்கியதில், அதில் பயணித்த 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பிலஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொரோடன் நகரில் இருந்து குளு மாவட்டத்தின் கலல் நகருக்கு நேற்று மாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

அப்பேருந்து பிலஸ்பூரின் பாலு நகர் உள்ள பாலம் அருகே மலைகள் உள்ள பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, பேருந்து முழுவதும் பாறைகள் விழுந்து, பேருந்தை மண் மூடியது.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர்வாசிகள், காவல்துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த ஓட்டுநர், நடத்துடன் உட்பட 15 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதே வேளையில் அதிர்ஷ்டவசமாக ஆருஷி (10) மற்றும் சவுரியா (8) என்ற இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதில் குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களின் தாயார், உறவினர்கள் என ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரச் சம்பவம் குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், “இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் துயரமானது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடியும் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து, நிவாரண நிதி அறிவித்துள்ளார். அவர், ”இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுள் அருள்புரியட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share