கோவை அருகே மிட்டாய் என நினைத்து சக மாணவர்களுக்கு குட்கா பொருட்கள் பகிரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையம் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் ஆசிரியர் சந்தேகத்தின் பெயரில் 6ம் வகுப்பு மாணவர்களின் புத்தக பையை சோதனை செய்துள்ளார். அப்போது மாணவர்களின் பையில் தடைசெய்யப்பட்ட குட்கா சம்பந்தப்பட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மாணவர்களிடம் விசாரித்த போது அவர்கள் மிட்டாய் என நினைத்து போதை வஸ்துகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் குட்கா சம்பந்தப்பட்ட பொருட்கள் வைத்திருந்த மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்தனர். அவர்களுக்கு மாணவர்களின் பைகளில் இருந்த குட்கா பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் நடந்த விசாரணையில் எலச்சிபாளையத்தில் உள்ள லோகு மளிகை என்ற கடையில் இந்த குட்கா பொருட்கள் வாங்கியது தெரியவந்தது.
அங்கு சென்று பார்த்த போது கடையின் பின் பகுதியில் இருந்த கட்டிடத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் வைக்கப்பட்டு விற்பனை செய்வதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்னர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் மளிகை கடையில் 141 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டி போலீசார் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர்களை குறிவைத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சம்பவங்களால் இளம் வயதிலேயே மாணவர்கள் தங்களை அறியாமலேயே போதை பொருட்களுக்கு அடிமையாகும் சூழலை ஏற்படுத்தும் என்பதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.