சென்னையில் 13 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்த சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது; தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனிடையே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில் புதன்கிழமை நள்ளிரவில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் 13 நாட்களாகப் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சிலர் குண்டு கட்டாக போலீசாரால் தூக்கி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். தூய்மைப் பணியாளர்கள் பலர் தேசிய கொடியுடன் கைதாகினர். இதனால் நள்ளிரவில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.